2017-06-22 15:32:00

அக்கறையுடன், கண்டிக்கும் தகுதியும் வேண்டும்


ஜூன்,22,2017. மற்றவர்களில் அக்கறையுள்ளவர்களாகச் செயல்பட வேண்டும், அதேவேளை, நன்மையிலிருந்து தீமையைப் பகுத்தறியத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும் என அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஆடுகள் மீது அக்கறையுடையவராக மட்டுமல்ல, நன்மை மற்றும் தீமைகள் குறித்து பகுத்தறியத் தெரிந்தவராகவும், மேய்ப்பர் செயல்பட வேண்டும் என்றார்.

நல்லாயன் தன் மந்தைகளுக்காக உயிரையும் கொடுப்பார் என்ற வார்த்தைகளைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நல்லாயன் என்பதற்கு எடுத்துக்காட்டாக, முதலில் தூய பவுலையும், பின்னர், இத்தாலியில் பணியாற்றி உயிர்துறந்த புகழ்பெற்ற அருள்பணியாளர் மிலானியையும் முன்வைத்தார். தன் மந்தைகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகச் செயல்படுவது, நல்லாயனின் முதல் குணம் என்றால், அவற்றுக்கு நன்மையையும் தீமையையும் பகுத்தறியக் கற்றுக் கொடுப்பது, இரண்டாவது குணம் எனவும் உரைத்தார் திருத்தந்தை.

வரலாற்றின் பல்வேறு காலங்களில் மக்கள் இறைவனைவிட்டு விலகிச் சென்றதையும், பின்னர், நல்ல மேய்ப்பர்களால் மீட்டுக்கொண்டு வரப்பட்டதையும் நாம் அறிவோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரத்தில், தான் இத்தாலியின் Bozzolo மற்றும் Barbiani பகுதியில் பயணம் மேற்கொண்டு, இரு அருள்பணியாளர்களின் கல்லறைகளைத் தரிசித்ததையும் குறிப்பிட்டார்.

திருஅவையை வழிநடத்திச் செல்பவர்கள் அனைவரும், தவறுகளைத் தண்டிக்கும் தகுதியுடையவர்களாகச் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.