2017-06-23 15:57:00

Serraவிடம் திருத்தந்தை : துணிவோடு முன்னோக்கிச் செல்லுங்கள்


ஜூன்,23,2017. துணிவு, படைப்பாற்றல், மனவுறுதி ஆகியவற்றுடன் தொடர்ந்து முன்னோக்கிச் செல்லுங்கள் என, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் தான் சந்தித்த Serra உலகளாவிய கழகத்தின் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

‘தொடர்ந்து முன்னோக்கிச் செல்லுங்கள், இறையழைப்பின் துணிவு’ என்ற தலைப்பில், ஜூன் 22, இவ்வியாழனன்று, உரோம் நகரில், 75வது பன்னாட்டு மாநாட்டைத் தொடங்கியுள்ள, Serra உலகளாவிய கழகத்தின் 600 பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தலைப்பை மையப்படுத்தி, தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஆண்டவரால் அழைப்புப் பெற்றுள்ள, குருத்துவப் பயிற்சி நிலையில் இருப்பவர்கள் மற்றும், அருள்பணியாளர்களுக்கு, Serra உறுப்பினர்கள், சிறப்பு நண்பர்கள் என்றும் கூறியத் திருத்தந்தை, நட்பு பற்றியும் பேசினார்.

நண்பர்கள், நம் பக்கம் அன்போடும் கனிவோடும் இருந்து, நாம் சொல்வதைக் கவனமாய்க் கேட்பவர்கள், நாம் தவறுகள் இழைக்கும்போது, தீர்ப்பிடாமல், இரக்கத்துடன் நம்முடன் நடந்துகொள்பவர்கள் என்றுரைத்த திருத்தந்தை, இத்தகைய ஒரு நட்பை, இந்த அமைப்பினர், பொதுநிலையினராக இருந்துகொண்டு, அருள்பணியாளர்களிடம் காட்டி, இறையழைத்தலுக்கு உதவுகின்றனர் என்று பாராட்டினார்.

தொடர்ந்து முன்னோக்கிச் செல்லுங்கள் என்பது, கிறிஸ்தவ அழைப்போடு ஒத்துப்போவது எனத் தான் நம்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, சுயத்திலிருந்து விடுபட்டு, ஆண்டவரோடு உள்ள உறவில் அகமகிழ்ந்து, பிறருக்கு நம்மையேத் திறக்கும் வழிகளில் பயணம் செய்வதற்கு விடுக்கப்படும் ஓர் அழைப்பே, இறையழைத்தல் என்றும் விளக்கினார்.  

சவால் எடுக்காமல் முன்னோக்கிச் செல்ல முடியாது என்றும், இதற்குத் துணிச்சலும், படைப்பாற்றல் திறனும், மனஉறுதியும் அவசியம் என்றும், படைப்பாற்றலை, பயம் அமுக்கி விடாதபடி கவனமாய் இருக்குமாறும், புதிய காரியங்கள் பற்றி சந்தேகப்படாமல், தூய ஆவியார் நமக்குமுன் வைக்கும் சவால்களை தழுவிக்கொள்ளுமாறும், கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Serra உலகளாவிய கழகத்தின் 75வது பன்னாட்டு மாநாடு, ஜூன் 25, வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.

Serra உலகளாவிய பொதுநிலையினர் கழகம், குருத்துவ மற்றும் துறவற அழைத்தலை ஊக்குவித்து, அவற்றுக்கு உதவி வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.