2017-06-23 15:26:00

ஆண்டவரின் குரலைக் கேட்பதற்கு சிறியவர்களாக மாற வேண்டும்


ஜூன்,23,2017. ஆண்டவரின் குரலைக் கேட்பதற்கு, நம்மைச் சிறியவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் என, இயேசுவின் திரு இதயப் பெருவிழாவான இவ்வெள்ளி காலையில், சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், மறையுரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்பெருவிழாத் திருப்பலியின் வாசகங்களை மையப்படுத்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவர் நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளார், நம் வாழ்வுப் பயணத்தில், நம்மோடு ஒன்றாகக் கலந்துள்ளார், மற்றும், நம்மீது கொண்டுள்ள அன்பால், தம் ஒரே மகனை, மற்றும், அம்மகனின் வாழ்வை அளித்துள்ளார் என்று கூறினார்.

கடவுளாகிய ஆண்டவர், இம்மண்ணுலகிலுள்ள எல்லா மக்களினங்களிலும், தம் சொந்த மக்களாக, இஸ்ரயேல் மக்களைத் தேர்ந்துகொண்டது (இணைச்சட்ட நூல் 7,6-11) பற்றிப் பேசிய திருத்தந்தை, இயேசுவின் திரு இதயத்தில், நம் மீட்பின் மாபெரும் மறையுண்மையை மகிழ்வோடு கொண்டாடுவதற்கு, கடவுள் அருள் வழங்குகிறார் எனக் கூறினார்.

தேர்ந்துகொண்டது, சொற்பமானவர்கள் என்ற, இரு சொற்கள் பற்றிய சிந்தனைகளை சிறப்பாக மறையுரையில் வழங்கியத் திருத்தந்தை, கடவுளை நாம் தேர்ந்துகொள்ளவில்லை, மாறாக, அவரே, நம் கைதியாக தம்மை ஆக்கி, நம் வாழ்வோடு இணைத்துள்ளார் எனவும் கூறினார்.

சொற்பமானவர்கள் என்ற சொல்லை விளக்குகையில், இஸ்ரயேல் மக்கள், எல்லா மக்களிலும் சொற்பமானவர்கள் என்பதால், அவர்களைக் கடவுள் தேர்ந்து கொண்டார் என, மோசே கூறியுள்ளதை நினைவுபடுத்திப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள், வலியவர்களை அல்ல, வலிமையற்றவர்களைத் தேர்ந்து கொண்டார், எனவே, ஆண்டவரின் குரலைக் கேட்பதற்கு, நம்மைச் சிறியவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்றார் திருத்தந்தை.

பக்தருக்கு, இயேசுவின் திரு இதயம், புனித அட்டை அல்ல, இந்த இதயம், சிலுவையில் இறக்கும்வரை, தம்மையே வெறுமையாக்கி, தம்மையே தாழ்த்தியது என்றும், இன்று நாம் சிறப்பிக்கும் இந்த திரு இதயம், நம்மை அன்புகூருகின்ற, நம்மைத் தேர்ந்தெடுத்த மற்றும், சிறியவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்திய இதயம் என்றும், மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.