2017-06-23 16:04:00

சமுதாயத்தின் விளிம்புகளில் உள்ள மக்களிடம் செல்லுங்கள்


ஜூன்,23,2017. “சமுதாயத்தின் விளிம்புகளில் உள்ள அனைத்து மக்களிடமும் செல்லுங்கள்! தூய ஆவியாரின் வல்லமையோடு அங்குச் சென்று, அம்மக்களோடு திருஅவையாக இருங்கள்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில், இவ்வெள்ளியன்று வெளியாயின.

மேலும், மால்ட்டா இறையாண்மை இராணுவ கத்தோலிக்க அமைப்பின் லெப்டினன்ட் அதிபர் Giacomo Dalla Torre del Tempio di Sanguinetto, சிரியா திருப்பீடத் தூதர் கர்தினால் மாரியோ செனாரி, குவாத்தமாலா திருப்பீடத் தூதர் பேராயர் Nicolas Henry Marie Denis Thevenin ஆகிய மூவரையும், இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து  உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், தென் கொரியாவின், இயேசுவின் சகோதர, சகோதரிகள் சபையினரின், Kkottongnae மாற்றுத்திறனாளிகள் கிராமத்தில், கட்டப்படவிருக்கும் புதிய மையங்களுக்குரிய அடிக்கல்களை ஆசீர்வதித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Kkottongnae மாற்றுத்திறனாளிகள் கிராமத்தை நிறுவிய அருள்பணி John Oh Woong-jin அவர்கள் தலைமையில் வந்த குழுவினர் கொண்டுவந்திருந்த அடிக்கல்களை, இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப் பின், ஆசீர்வதித்தார் திருத்தந்தை.

அக்கிராமத்தில் அமைக்கப்படவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் செப மையம், கர்தினால் நிக்கோலாஸ் சியோங் ஜின்-சுக் மையம் ஆகிய இரண்டிற்கும், இந்த அடிக்கல்கள் பயன்படுத்தப்படும் என, யூக்கா செய்தி கூறுகிறது.  

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2014ம் ஆண்டில், தென் கொரியாவுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது, Kkottongnae கிராமத்தைப் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.