2017-06-23 16:19:00

ஜூன் 23, உலக கைம்பெண்கள் தினம்


ஜூன்,23,2017. உலகளவில், கைம்பெண்களின் நிலைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், 2011ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும், ஜூன் 23ம் தேதியன்று, உலக கைம்பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

கணவரின் இறப்புக்குப்பின், ஏராளமான கைம்பெண்கள், தங்களின் சமூக மற்றும், பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக, உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நிலையில் உள்ளனர் என்று, ஐ.நா. நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், உலகளவில் 24 கோடியே 50 இலட்சத்திற்கு மேற்பட்ட கைம்பெண்கள் உள்ளனர் என்றும், இவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர், வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர், மற்றும், கொடும் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்றும், ஐ.நா. நிறுவனம் கூறியுள்ளது.

ஆயுத மோதல்களால் பெருமளவான பெண்கள், கைம்பெண்களாக ஆகுகின்றனர் எனவும், ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசில், பெண்களில் ஏறக்குறைய ஐம்பது விழுக்காட்டினர் கைம்பெண்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

உலகிலுள்ள வயதுவந்த பெண்களில், ஏழு முதல் பதினாறு விழுக்காடுவரை, கைம்பெண்கள் எனக் கூறும் ஒரு புள்ளி விபரம், ஈராக்கில், முப்பது இலட்சம் பெண்கள், மற்றும், ஆப்கானிஸ்தானின் காபூலில், எழுபதாயிரத்திற்கு  மேற்பட்ட  பெண்கள், கைம்பெண்கள் எனவும் கூறுகிறது.

ஆண்களைவிட பெண்கள் அதிக காலம் வாழ்வது, தங்களைவிட வயதில் மூத்த ஆண்களைத் திருமணம் செய்வது ஆகிய இரு காரணங்கள், பெண்களில், கைம்பெண்கள் அதிகமாக இருப்பதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது. 

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.