2017-06-23 16:17:00

மாதத்தின் முதல் நாள் அமைதிக்காக கிறிஸ்தவ ஒன்றிப்பு செபம்


ஜூன்,23,2017. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளன்று, அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும், அமைதி மற்றும், நல்லிணக்கத்திற்காக சிறப்பு செபம் செய்யலாம் எனப் பரிந்துரைத்துள்ளார், இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர்.

அஸ்ஸாம் மாநிலத்தின், குவாஹாட்டியின் முன்னாள் பேராயராகிய, தாமஸ் மெனாம்பரம்பில் அவர்கள், தங்கள் சமூகங்களுக்குள் அமைதி மற்றும், நல்லிணக்கம் ஏற்படுவதற்காக, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளன்று, அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும், சிறப்பு செபம் செய்யலாம் எனச் சொல்லி, அதற்குரிய செபம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

பேராயர் மெனாம்பரம்பில் அவர்களின் இந்தப் பரிந்துரையை, வடகிழக்கு இந்திய கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு வரவேற்றுள்ளதென, ஆசியச் செய்தி கூறுகிறது.

இந்தியாவில், அமைதியற்றநிலை அதிகம் காணப்படும் பகுதிகளில் ஒன்றாகிய, வட கிழக்குப் பகுதியில், பதட்டநிலைகளைக் குறைத்து, அப்பகுதி மக்கள், சமாதானத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்வற்கு உதவும் ஒரு முயற்சியாக, இந்தப் பரிந்துரையை அனைத்துக் கிறிஸ்தவ சபைகளுக்கும் சமர்ப்பித்துள்ளார், ஓய்வுபெற்றுள்ள பேராயர் மெனாம்பரம்பில்.

இந்தச் செப முயற்சி, வருகிற ஆகஸ்ட் மாதத்திலிருந்து, ஒவ்வொரு மாதமும், முதல் நாளன்று கடைப்பிடிக்கப்படும். இதனைத் தனியாகவும், நண்பர்கள் குழுவாகவும் செய்யலாம் எனவும், துறவறக் குழுமங்கள், பள்ளிகள், ஆலயங்கள், நிறுவனங்கள் என, எல்லா இடங்களிலும் இச்செபம் செய்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும், ஆசியச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.