சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ ஞாயிறு சிந்தனை

பொதுக்காலம் 12ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

போதிக்கும் இயேசு

24/06/2017 11:48

உயிர்ப்புப் பெருவிழா துவங்கி, சென்ற ஞாயிறு முடிய, பல ஞாயிறு வழிபாடுகள், விழாக்கோலம் பூண்டிருந்தன. இந்த ஞாயிறு, நாம் பொதுக்காலத்தில் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளோம். தொடர்ந்து வந்த விழாக்களின் ஆரவாரங்கள் ஓய்ந்து, அமைதியான முறையில் பொதுக்காலத்தை துவக்க நினைக்கும் நமக்கு, அமைதிக்குப் பதில், அச்சத்தை உருவாக்கும் எண்ணங்களை, இன்றைய வாசகங்கள் வழங்குகின்றன.

"'சுற்றிலும் ஒரே திகில்' என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்" (எரேமியா 20:10) என்று இறைவாக்கினர் எரேமியா, இன்றைய முதல் வாசகத்தைத் துவக்குகிறார். "உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்" (மத்தேயு 10:26) என்று, இன்றைய நற்செய்தியில் இயேசு அறிவுரை வழங்குகிறார். திகில், கொலை, அச்சம் என்று கூறும் இந்த வாசங்களைக் கேட்கும்போது, இவையே நம் வாழ்வின் அங்கங்களாகிவிட்டனவோ என்ற கலக்கம் உண்டாகிறது. நம் கலக்கத்தை உறுதிசெய்யும் வண்ணம் நாம் கடந்து வந்த விழாக்காலம் வேதனையான வன்முறைச் செய்திகளைத் தாங்கி வந்தது.

வன்முறைகளை மேற்கொள்ளும் அடிப்படைவாதக் குழுவினர், தங்கள் கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் அரசையோ, மற்ற சக்தி வாய்ந்த குழுவினரையோ நேரடியாகத் தாக்குவதற்குப் பதில், அப்பாவி பொதுமக்களைத் தாக்குவது, கடந்த 50 ஆண்டுகளாக பெருகியுள்ளது. மக்கள் கூடும் கடைவீதிகள், பயணிக்கும் பேருந்துகள், இரயில் பேட்டிகள், மருத்துவ மனைகள், பள்ளிகள் என்று... கண்மூடித்தனமான வன்முறைத் தாக்குதல்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இந்தத் தாக்குதல்களுக்கு, வழிபாட்டுத் தலங்களும் இலக்காகியுள்ளன. மதத்தின் பெயரால் வன்முறைகள் நிகழம்போது, நம் உள்ளங்களில் ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

மத நம்பிக்கை காரணமாக, வன்முறைகளுக்கு உள்ளாகும்போது, நாம் என்ன செய்யவேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லித்தருகிறார். நாம் இன்று வாசிக்கும் நற்செய்தி பகுதி, மத்தேயு நற்செய்தி 10ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவின் துவக்கத்தில், இயேசு, தன் திருத்தூதர்கள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து (மத். 10: 1-4), அவர்களை, பணியாற்ற அனுப்புகிறார். அவ்வேளையில், அவர்களுக்கு வழங்கிய அறிவுரைகள், இப்பிரிவில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

பணியாற்றச் செல்லும் சீடர்கள், எவ்வகை உலகைச் சந்திக்கவுள்ளனர் என்பதை, இயேசு, ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகக் கூறுகின்றார். "இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன்" (மத். 10:16) என்று கலப்படமற்ற உண்மையைக் கூறும் இயேசு, தன் சீடர்களைச் சூழும் ஓநாய்களில் சில, அவர்களது சொந்தக் குடும்பத்தினராகவே இருப்பர் (காண்க. மத். 10: 21-22) என்றும் எச்சரிக்கிறார். அவர்கள் செல்லுமிடங்களிலெல்லாம் வெறுப்பும், துன்பமும் அவர்களைத் துரத்தும் (மத். 10:23) என்பதையும் வெளிப்படையாகக் கூறும் இயேசு, அவற்றைக் கண்டு தன் சீடர்கள் அஞ்சவேண்டாம் என்று சொல்கிறார். இதுவே, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளாக அமைகின்றன.  

திருத்தூதர்களாக இயேசு தேர்ந்தெடுத்தவர்கள் யாரும் வீரப்பரம்பரையில் பிறந்தவர்கள் அல்ல; படைப்பயிற்சி பெற்றவர்கள் அல்ல. எனவே, அவர்கள் ஆயுதங்களை ஏந்தி தங்கள் பயணத்தைத் துவக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், பொன், வெள்ளி, செப்புக் காசுகளை எடுத்துச் செல்லவேண்டாம்; மிதியடிகளோ, கைத்தடியோ வேண்டாம் (மத். 10: 9-10) என்பதை, இயேசு, தன் சீடர்களுக்கு முதல் அறிவுரையாக வழங்குகிறார்.

சீடர்கள் சந்திக்கப்போகும் வன்முறைகளுக்கு எதிராக, இயேசு அவர்களுக்கு வழங்கும் ஒரே கேடயம், பாதுகாப்பு... இறைவன் மீது அவர்கள் கொள்ளவேண்டிய நம்பிக்கை. 'காசுக்கு இரண்டு' என்ற கணக்கில் விற்கப்படும் சிட்டுக்குருவிகள் தரையில் விழாதவாறு பராமரிக்கும் இறைவன், அவர்களையும் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை, தன் சீடர்களை வழிநடத்தவேண்டும் என்று இயேசு கூறுவது, நம்ப முடியாத சவாலாக ஒலிக்கிறது.

இயேசு வழங்கிய இந்த சவால், 20 நூற்றாண்டுகளாக, கோடான கோடி உள்ளங்களை உறுதிப்படுத்தியுள்ளது."ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்" (மத். 10:28) என்று இயேசு தன் சீடர்களுக்குக் கூறியது, கோடான கோடி கிறிஸ்தவர்களை, மரணம் வரை துணிவுகொள்ளச் செய்துள்ளது.

2017ம் ஆண்டு, மே 26, வெள்ளிக்கிழமை, எகிப்து நாட்டில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் திருத்தலமான புனித சாமுவேல் மடத்திற்கு திருப்பயணிகள் பேருந்தில் சென்றனர். அவர்களை வழிமறித்து நிறுத்திய இஸ்லாமியத் தீவிரவாதிகள், அப்பயணிகளை பேருந்திலிருந்து இறக்கி, கிறிஸ்துவை மறுதலிக்குமாறு ஒவ்வொருவரிடமும் கூறினர். அவர்கள் மறுக்கவே, அவர்கள் ஒவ்வொருவரையும் தலையில் சுட்டுக் கொன்றனர். 28 கிறிஸ்தவர்கள் அன்று கொல்லப்பட்டனர்.

2015ம் ஆண்டு, பிப்ரவரி 21ம் தேதி, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சேர்ந்த 21 இளையோரை, இஸ்லாமிய அரசு எனப்படும் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள், லிபியா கடற்கரையில், கழுத்தை அறுத்துக் கொன்றனர். அவ்விளையோர் அனைவரும் இயேசுவின் பெயரை உச்சரித்தபடியே உயிர் துறந்தனர்.

2008ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி முதல் 28ம் தேதி முடிய, இந்தியாவின் ஒடிஸ்ஸா மாநிலத்தில், கந்தமால் பகுதியில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக, இந்து அடிப்படைவாதிகள் மேற்கொண்ட வன்முறையில், 45 பேர் கொல்லப்பட்டனர்.

1996ம் ஆண்டு, மார்ச் 27ம் தேதி, அல்ஜீரியா நாட்டில், சிஸ்டெர்சியன் (அல்லது, 'Trappist') துறவு சபையைச் சேர்ந்த ஏழுபேரை, இஸ்லாமியத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். மே 31ம் தேதி, அத்துறவிகளின் துண்டிக்கப்பட்ட தலைகள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டன.

1945ம் ஆண்டு, பிப்ரவரி 7ம் தேதி, போஸ்னியா-ஹேர்செகொவினா நாட்டின், Široki Brijeg என்ற ஊரில், பிரான்சிஸ்கன் துறவு மடத்தில் கம்யூனிச படையினர் நுழைந்தனர். "கடவுள் இறந்துவிட்டார்..." என்று கத்தியபடி, அவர்கள், துறவிகளிடமிருந்த சிலுவைகளைப் பறித்து, கீழே எறிந்தனர். துறவிகளோ, சிலுவைகளை எடுத்து, அவற்றை, தங்கள் மார்போடு இறுகப் பற்றிக்கொண்டனர். அந்த 30 துறவிகளும் மடத்திலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு, கொல்லப்பட்டனர். அவர்களது உடல்கள் அனைத்தும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

இந்தப் படுகொலைகள் அனைத்திலும் ஓர் உண்மை தெளிவாக ஒளிர்கின்றது. அதுதான், இறந்தவர் அனைவரும் காட்டிய உறுதி. தங்கள் உடலைக் கொல்பவர்களைக் குறித்து எந்த அச்சமும் இன்றி, தங்கள் உயிரைக் கையளித்ததால், தங்கள் ஆன்மாவை அவர்கள் முடிவில்லா வாழ்வில் இணைத்துக்கொண்டனர் என்பதை நாம் நம்புகிறோம். இவர்களில் பலரை அருளாளர்கள் என்று அறிவிக்கும் வழிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மரணத்தைச் சந்தித்த இவர்கள், தங்கள் ஆன்மாவை மட்டுமல்ல, தங்களைக் கொலை செய்தோரின் ஆன்மாக்களையும் காப்பாற்றியுள்ளனர் என்பதை பின்வரும் நிகழ்வு வெளிச்சமிட்டு காட்டுகிறது.

கடவுள் இறந்துவிட்டார் என்று கத்தியபடியே, Široki Brijeg பிரான்சிஸ்கன் துறவு மடத்தில் நுழைந்த கம்யூனிசப் படையினரில் ஓருவர், மனம் மாறி, மீண்டும் கத்தோலிக்க மதத்தைத் தழுவினார். தன் மனமாற்றத்திற்கு, அத்துறவிகளின் உன்னத மரணமே காரணம் என்று அவர் கூறியுள்ளார்: "நான் சிறு குழந்தையாக இருந்தபோது, கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை என் அம்மா, என் உள்ளத்தில் ஆழமாகப் பதித்தார். அம்மா சொல்லித்தந்த பாடத்தை அழித்து, ஸ்டாலின், லெனின், டிட்டோ ஆகியத் தலைவர்கள், கடவுள் இல்லை என்று சொல்லித் தந்தனர். ஆனால், அன்று, அத்துறவிகள் இறக்கும்போது, அவர்கள் முகங்களில் தெரிந்த அமைதி, அவர்களைக் கொல்லும் எங்களுக்காக அவர்கள் எழுப்பிய செபம், இவற்றைக் கண்டேன். அப்போது, அம்மா எனக்குச் சொல்லித்தந்த உண்மை, மீண்டும் என் உள்ளத்தில் ஆழமாய் பதிந்தது. ஆம். கடவுள் வாழ்கிறார்" என்று அவர் சாட்சியம் கூறியுள்ளார்.

அத்துறவிகளைச் சுட்டுக் கொன்றவர்களில் ஒருவரான இவர், மீண்டும் கத்தோலிக்க மறையைத் தழுவினார். அவரது மகன் ஓர் அருள்பணியாளராகவும், மகள் ஓர் அருள் சகோதரியாகவும் இன்று பணியாற்றி வருகின்றனர். தங்கள் உடலைக் கொல்பவர்களைக் குறித்து பயம் ஏதுமின்றி, தங்கள் உயிரைக் கையளித்த பிரான்சிஸ்கன் துறவிகள், தங்கள் ஆன்மாவைப் புனிதமாகக் காத்துக்கொண்டனர். அதுமட்டுமல்ல, தங்களைக் கொலை செய்தவர்களில் ஒருவரின் ஆன்மாவையும் அவர்களது மரணம் காப்பாற்றியது.

கிறிஸ்துவின் சாட்சிகளாக இறக்கும் வாய்ப்பு நம் அனைவருக்கும் கிடைக்குமா என்பது நிச்சயமில்லை. ஆனால், கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழும் அழைப்பு நம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நம்மில் பலர் வாழும் கிறிஸ்தவ வாழ்வு, 'இறைவன் இறந்துவிட்டார்' என்பதை, சொல்லாமல் சொல்லும் வாழ்வாக மாறி வருகிறது.

உலகத்தோடு சேர்ந்து, கூட்டத்தோடு சேர்ந்து, நம் தனிப்பட்டக் கொள்கைகளை துறந்து வாழ்வதை இன்று 'பேஷன்' என்று சொல்லிக்கொள்கிறோம். நன்னெறி, நற்செய்தி இவற்றின் விழுமியங்களைப் பின்பற்றினால் 'பழமைவாதி' என்று முத்திரை குத்தப்படுவோமோ என்று பயந்து, கூட்டத்தோடு சேர்ந்துவிடுகிறோம். கிறிஸ்துவையும், நற்செய்தி கூறும் விழுமியங்களையும் பின்பற்றவோ, தேவைப்பட்டால், அனைவரும் அறியும்படி உயர்த்திப்பிடிக்கவோ நாம் அழைக்கப்படும்போது, முன் வருகிறோமா, பின் செல்கிறோமா என்பதை இன்று ஆய்வு செய்து பார்க்கலாம். இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு இதைப்பற்றிய ஓர் எச்சரிக்கையை வழங்கியுள்ளார்:

மத்தேயு 10 32-33

மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.

கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ்வதற்கு, தேவைப்பட்டால், நம் உயிரை வழங்குவதற்கு, இறைவன் தரும் அழைப்பை முழுமனதோடு ஏற்க, இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் துணிவை வழங்குவாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

24/06/2017 11:48