2017-06-24 14:48:00

தண்ணீர் வாழ்வின் ஊற்று, இதை மாசுபடுத்துவது முரணானது


ஜூன்,24,2017. தண்ணீர் வாழ்வின் ஊற்று, இதை மாசுபடுத்துவது, இதற்கு முரணானது என, ஒரு பன்னாட்டு நீச்சல் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்பவர்களிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

இஞ்ஞாயிறன்று நிறைவடையும் 54வது உலக "Settecolli" நீச்சல் போட்டியில் கலந்துகொள்பவர்கள், இதனை நடத்துபவர்கள், மற்றும், இதற்கு உதவிசெய்கிறவர்கள் என, 300 பேரை இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விளையாட்டு என்பது ஒரு விழா, ஆயினும், இது விழுமியங்கள் அற்றது அல்ல எனக் கூறினார்.

மாசுபடுத்தப்படாத தண்ணீரின் முக்கியத்துவம் பற்றியும் பேசிய திருத்தந்தை, தண்ணீரோடு தொடர்புகொண்டுள்ள இவ்வீரர்களின் போட்டித்தன்மை, விளையாட்டு என எல்லாமே, ஒரு வித்தியாசமான தண்ணீர் கலாச்சாரத்திற்கு உதவ முடியும் என்றும், தண்ணீர் என்பது வாழ்வு, தண்ணீரின்றி, வாழ்வே கிடையாது என்றும், வாழ்வு பற்றிப் பேசுவது, வாழ்வின் தொடக்கமும், ஊற்றுமாகிய, கடவுள் பற்றிப் பேசுவதாகும் என்றும், கூறினார்.     

கிறிஸ்தவ வாழ்வும், திருமுழுக்கோடு, தண்ணீரின் அடையாளத்தோடு ஆரம்பிக்கின்றது  எனவும் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்கள், விளையாட்டுக்கு, பல நற்பண்புகளை வளர்க்க வேண்டியது அவசியம் எனவும் கூறினார்.

புடாபெஸ்ட் நகரில், வருகிற ஜூலையில் நடைபெறவுள்ள உலக கோப்பை விளையாட்டுக்கு முன்னதாக, உரோம் நகரில் Settecolli நிகழ்வு இடம்பெறுகின்றது. இதில், 36 நாடுகளிலிருந்து 700க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் கலந்துகொள்கின்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.