2017-06-24 14:56:00

மறைப்பணியில் முன்னோக்கிச் செல்ல துணிச்சலைக் கொண்டிருங்கள்


ஜூன்,24,2017. நற்செய்தியின் அடிப்படையில் துறவறக் குழுக்களைக் கட்டியெழுப்புமாறும், நற்செய்தி அறிவிப்புப்பணியின் முதன்மைக் கூறாக, குழுக்களில் உடன்பிறந்த உணர்வு கொண்ட வாழ்வை அமைக்குமாறும், ஒரு துறவு சபையினரிடம் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு ஆண் துறவு சபையின் பொதுப் பேரவையில் கலந்துகொள்ளும், முப்பது பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இப்பொது பேரவையின் மையப் பொருளின் அடிப்படையில், மூன்று காரியங்கள் பற்றிப் பேச விரும்புவதாகத் தெரிவித்தார்.

உயிர்த்த ஆண்டவரின் பிரசன்னத்திற்குச் சாட்சிகள், குழுவிலிருந்து உலகுக்கு, மகிழ்வு மற்றும், உயிர்ப்பு நம்பிக்கையின் இறைவாக்கினர்கள் என்ற தலைப்புகளில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, மற்றவருக்கு விடுதலை வாழ்வை வழங்குவதற்கும், நம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொருவரும் புதிய வாழ்வுக்குப் பிறப்பதற்கும், தனிப்பட்ட வாழ்வில் உயிர்ப்பு அவசியம் என்று கூறினார்.

அர்ப்பண வாழ்வு ஆண்டில், துறவியருக்கு அடிக்கடி தான் கூறி வந்ததையே மீண்டும் சொல்ல விரும்புவதாகவும் தெரிவித்த திருத்தந்தை, கடந்த காலத்தை நன்றியோடு  நினைவுகூர்ந்து, நிகழ்காலத்தைப் பேரன்புடன் வாழ்ந்து, வருங்காலத்தை நம்பிக்கையுடன் தழுவிக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

கடந்தகால நினைவு என்பது, தொல்பொருள் ஆய்வு அல்ல எனவும், துறவு சபையின் தனிவரம் என்பது, வடிகட்டிய தண்ணீர் அல்ல, மாறாக, இது எப்போதுமே, உயிருள்ள தண்ணீரிலிருந்து பிறக்கும் ஊற்றாகும் எனவும், இயேசுவின் மீது எப்போதும் அன்பு கொண்டு வாழ வேண்டுமெனவும், இயேசு நம்முடன் இருக்கிறார் என்ற அறிவில், வருங்காலத்தை நம்பிக்கையுடன் ஏற்க வேண்டுமெனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

‘உயிர்த்த ஆண்டவரின் பிரசன்னத்திற்குச் சாட்சிகள், குழுவிலிருந்து உலகுக்கு’ என்ற தலைப்பில், இச்சபையினர் கடந்த இரு வாரங்களாக பொதுப் பேரவையை நடத்தி வருகின்றனர். 19ம் நூற்றாண்டில், பிரான்சில் குடியேறிய போலந்து மக்களுக்காக, போலந்து குடியேற்றதாரரின் திருத்தூதர் எனப்படும் Bogdan Janski என்பவரால், இச்சபை ஆரம்பிக்கப்பட்டது. பங்குத்தளங்களில் பணியாற்றவும், இளைஞர்களுக்கு கல்வி வழங்கவுமென, Peter Semenenko, Jerome Kajsiewicz ஆகிய இருவருடன் சேர்ந்து, இவர்   1836ம் ஆண்டில் இச்சபையைத் தொடங்கினார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.