2017-06-26 16:29:00

ஏமனில் 2 இலட்சம் பேருக்கு காலரா நோய் பாதிப்பு


ஜூன்,26,2017. ஏமன் நாட்டில் காலரா நோயால் இதுவரை 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், அந்நாட்டு அதிகாரிகள் இது குறித்து அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் யுனிசெஃப் மற்றும் உலக நலவாழ்வு நிறுவனம் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

ஒவ்வொரு நாளும் 5000 பேர் வீதம், இந்நோய் பாதிப்புக்கு உள்ளாவதாகவும், இதுவரை 2 இலட்சம் பேர் வரை காலரா நோய் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், இறப்புகள் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும், யுனிசெஃப் இயக்குனர்  Anthony Lake, மற்றும் உலக நலவாழ்வு நிறுவன இயக்குனர் Margaret Chan ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

இரண்டே மாதங்களில் இந்நோய் வேகமாக பரவி, 1300 பேரை பலி வாங்கியுள்ள நிலையில், உடனடி தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என்கிறது இவ்வறிக்கை.

கடந்த இரண்டாண்டுகளாக ஏமன் நாட்டில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரால், நீர் விநியோகம் மற்றும் நல ஆதரவுப்பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் ஒரு கோடியே நாற்பத்தைந்து இலட்ச மக்கள் இவ்வசதிகள் இன்றி தனித்து விடப்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் நிதி அமைப்பும், உலக நலவாழ்வு நிறுவனமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போதிய சத்துணவின்மையால்  பலவீனமடைந்துள்ள குழந்தைகள், காலரா நோயை எதிர்த்துப்போராட முடியாத நிலையில் இருப்பதாகவும், கடந்த 10 மாதங்களாக அந்நாட்டின் நலப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், நல ஆதரவுப்பணிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கிறது, யுனிசெஃப் மற்றும் உலக நலவாழ்வு அமைப்பு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.