2017-06-26 17:02:00

நோயாளர் பராமரிப்பு சமூகத்தின் விலைமதிப்பிட முடியாத சொத்து


ஜூன்,26,2017. புற்றுநோய் தடுப்பு முயற்சிகள் குறித்த மனப்பான்மையை, ஒரு வாழ்வுமுறையாக மாற்ற முயன்றுவரும், இத்தாலிய அமைப்பு ஒன்றை, இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்து, தன் நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புற்றுநோய்க் கட்டிகளுக்கு எதிரான இத்தாலிய கழகம் என்ற அமைப்பின் அங்கத்தினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, வியாபார நோக்கம் இல்லாமல், மக்களிடையே விழிப்புணர்வையும், பயிற்சிகளையும் வழங்கும் இந்த தன்னார்வலர்களின் பணி, மக்களின் வாழ்வில், ஒவ்வொரு நாளும் நல்மாற்றங்களை உருவாக்கி வருகிறது என்று கூறினார்.

தாழ்ச்சியுடனும், அமைதியிலும் ஆற்றப்படும் இப்பணி, துன்புறுவோருக்கு, தன்னலமற்ற சேவையின் எடுத்துக்காட்டாக உள்ளது எனவும் பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உடல்நலம் என்பது, ஒவ்வொருவரின் அடிப்படைக் கூறாக இருக்கும் சூழலில், நோயாளர்கள் மீது அக்கறை காட்டி, அவர்களுக்குப் பணியாற்றுவது, சமூகத்தின் விலைமதிப்பிட முடியாத சொத்தாக கணிக்கப்படுகிறது என்ற பாராட்டையும், இந்த இத்தாலிய கழகத்திடம் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.