2017-06-26 16:35:00

விட்டுக் கொடுப்பதே, மத நல்லிணக்க முதல் படி


ஜூன்,26,2017.  கிறிஸ்தவ-முஸ்லீம் உறவுகளின் சிறந்த எடுத்துக்காட்டாக, இஞ்ஞாயிறு ரமதான் விழா அன்று, இந்தோனேசியாவின் ஜகார்த்தா பேராலயம், தன் வளாகத்தை, இஸ்லாமியர்கள் பயனபடுத்த அனுமதித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக, இஸ்லாமியத் திருவிழாக்களின்போது, கத்தோலிக்கப் பேராலய வளாகம் இஸ்லாமியர்களாலும், கத்தோலிக்கப் பெரு விழாக்களின்போது, ஜகார்த்தா மசூதி வளாகம் கத்தோலிக்கர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருவதன் ஒருபகுதியாக,  இஞ்ஞாயிறும் ஜகார்த்தா பேராலய வளாகம், இஸ்லாமியர்கள், தங்கள் வாகனங்களை நிறுத்திச் செல்லவும், அங்கு கூடவும் அனுமதிக்கப்பட்டது.

ஜகார்த்தா கத்தோலிக்கப் பேராலயமும், அந்நகர் பெரிய மசூதியும் எதிர் எதிராக இருப்பதால், இருதரப்பினரும் ஒருவர் மற்றவரின் வசதிகளை பயன்படுத்தி வருவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

இவ்வாண்டு, ஞாயிறு, காலை ஆறு மணி திருப்பலியும், இஸ்லாமியர்களின் செப வழிபாட்டிற்கு ஊறுவிளைவிக்காவண்ணம், வேறு நேரத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது. 

மத சகிப்பற்றத் தன்மைகள் வேகமாக பரவி வரும் இன்றையச் சூழல்களில், நம்மால் இயன்றதை ஆற்றி, மத நட்புணர்வுக்கும், இணக்க வாழ்வுக்கும், சகிப்பு நிலைக்கும் உதவுவது இன்றியமையாதது என்றார், ஜகார்த்தா பேராலயப் பங்குத்தந்தை, அருள்பணி Adriana Yeanne Kawuwung.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.