சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

முழு ஒன்றிப்பை நோக்கிய பாதையில் நடைபோட..

கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபை பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்

27/06/2017 14:53

ஜூன்,27,2017. புனிதர்கள் பேதுருவும் பவுலும் வேறு வேறு வழிகளில் இறைவனுக்குச் சேவையாற்றினாலும், இருவரும் இறைத்தந்தையின் இரக்கம் நிறை அன்பின் சாட்சிகளாக ஒரே நோக்குடன் செயல்பட்டார்கள் என்பதை மனதில்கொண்டே, இப்புனிதர்களின் திருவிழாவை கிழக்கு மற்றும் மேற்கு திருஅவைகள் இணைந்து கொண்டாடுகின்றன என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வியாழனன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் 'புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல்' பெருவிழாவில் பங்குபெற கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களின் பிரதிநிதிகளாக அனுப்பப்பட்டுள்ள குழுவை, இச்செவ்வாய்க்கிழமை காலை, திருப்பீடத்தில் சந்தித்தபோது, கிறிஸ்தவ ஒன்றிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபை, மற்றும், கத்தோலிக்க திருஅவையின் தலைமைப்பீட பாதுகாவலர்களின் திருவிழாக்களின்போது இவ்விரு சபைகளும், பிரதிநிதிகள் குழுவை அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,   இத்தகைய சூழல்கள் இருதரப்பினரிடையேயும் முழு ஒன்றிப்பிற்கான ஆவலை அதிகரிக்க உதவுகின்றன என்றார்.  

கிறிஸ்தவத்தின் முதல் ஆயிரம் ஆண்டுகளில், இயேசுவின் சீடர்களின் படிப்பினைகளுக்கு இயைந்த வகையில் பல்வகைப்பட்ட இறையியல், ஆன்மீக மற்றும் திருஅவை பாரம்பரியங்களைக் கொண்டிருந்தாலும், இவ்விரு திருஅவைகளும் ஒரே திருப்பலி மேடைகளைப் பகிர்ந்து வந்ததையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, பன்மைத்தன்மையைப் பாதுகாக்கும் அதேவேளை, ஒன்றிப்பையும் கொண்டிருக்க முடியும் என்றார்.

1967ம் ஆண்டு கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை Athenagoras அவர்களுக்கும், திருத்தந்தை, அருளாளர் 6ம் பவுல் அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின் ஐம்பதாம் ஆண்டு தற்போது நினைவுகூரப்படுவதையும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 

இயேசுவின் மீது கொண்ட அன்பினால் மட்டுமே உந்தப்பட்டு, ஒன்றிப்பை நோக்கிய பாதையைப் பலப்படுத்திய இவர்களின் இந்த எடுத்துக்காட்டு, நாமனைவரும், முழு ஒன்றிப்பை நோக்கி நடைபோட ஊக்கமளிக்கிறது எனவும் கூறினார் திருத்தந்தை.

அடுத்த செப்டம்பரில், கிரேக்கத்தின் Leros நகரில், கத்தோலிக்க திருஅவைக்கும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைக்கும் இடையே இறையியல் கருத்துப் பரிமாற்றங்கள் குறித்த, ஒருங்கிணைந்த உலகளாவிய கூட்டம் இடம்பெற உள்ளதையும் இச்சந்திப்பின்போது நினைவூட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

27/06/2017 14:53