சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறையுரைகள்

வயது முதிர்ந்தவர்கள் இளையோருக்கு நிறைய வழங்க முடியும்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயராகத் திருப்பொழிவு பெற்றதன் 25ம் ஆண்டு நிறைவு நாளில் கர்தினால்களுடன் திருப்பலி - RV

27/06/2017 14:43

ஜூன்,27,2017. வயது முதிர்ந்தவர்கள், தங்களின் ஆன்மீக வாழ்வில் முன்னேறுவதை நிறுத்திவிடக் கூடாது என்றும், இளையோருக்கு, ஆன்மீகத் தாத்தாக்களாக வாழுமாறு கடவுள் அவர்களை அழைக்கின்றார் என்றும், இச்செவ்வாய் காலை திருப்பலியில் மறையுரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவாக்குப் பணியை ஆற்றுவதற்கு, வயது முதிர்ந்தவர்களின் அனுபவங்களையும், அவர்களின் நேர்மறைக் கனவுகளையும் எதிர்பார்த்திருக்கும் இளையோருக்கு, அவர்கள் தங்களிடமுள்ள சிறப்பானவைகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, இதற்காக, ஆண்டவரிடம் தான் செபிப்பதாகக் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயராகத் திருப்பொழிவு பெற்றதன் 25ம் ஆண்டு நிறைவு நாளாகிய, ஜூன் 27, இச்செவ்வாயன்று, உரோம் நகரிலுள்ள அனைத்துக் கர்தினால்களுடன் இணைந்து, வத்திக்கானின் பவுல் சிற்றாலயத்தில், கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றியவேளை, இவ்வாறு மறையுரையாற்றினார்.

கடவுளுக்கும், ஆபிராமுக்கும் இடையே நடந்த உரையாடல் பற்றிக் கூறும், இந்நாளின் முதல் வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "எழுந்திரு!", "நோக்கு!", "நம்பிக்கை கொள்!" ஆகிய மூன்று சொற்களை மையப்படுத்தி, சிந்தனைகளை வழங்கினார்.

உன் நாட்டிலிருந்து புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல் என (தொ.நூல் 12:12), கடவுள் ஆபிராமிடம் கூறினார், ஆபிராமும், எழுந்து, தொடர்ந்து நடக்கத் தொடங்கினார், இதற்கு அடையாளமாக கூடாரம் உள்ளது என்றும், ஆபிராம், ஒருபோதும் தனக்கென ஒரு வீட்டைக் கட்டியதில்லை என்றும், திருத்தந்தை கூறினார்.

எப்போதும் கண்களை உயர்த்தி முன்னோக்கிப் பார்த்து, நம்பிக்கையோடு செல் என்று, கடவுள் ஆபிராமிடம் கூறினார் எனவும், ஆபிராமை கடவுள் அழைத்தபோது, அவர் ஓய்வெடுக்க வேண்டிய வயது முதிர்ந்தவராக இருந்தார், ஆனால், அவரை இளைஞர் போன்று, சாரணர் படைவீரர் போன்று, எழுந்து, முன்னோக்கி, நம்பிக்கையுடன் நட என, ஆண்டவர் சொன்னார் எனவும், கூறினார் திருத்தந்தை.

நல்லதை விரும்பாதவர்கள், நாம் திருஅவையின் முதியவர்கள் எனச் சொல்வார்கள், இது, ஒரு கேலிக்கூத்தாகும், இவர்கள், தாங்கள் சொல்வது என்னவென்பதைப் புரியாமல் இருக்கின்றார்கள் என, தன்னுடன் இணைந்து இத்திருப்பலியை நிறைவேற்றிய கர்தினால்களிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் வயது முதிர்ந்த நிர்வாகிகள் அல்ல, நாம் தாத்தாக்கள், இவ்வாறு நாம் உணராவிட்டால், ஆண்டவரிடம் இதற்காக அருளை மன்றாட வேண்டுமென்று மறையுரையில் உரைத்த திருத்தந்தை, தாத்தாக்களாகிய நம்மை, பேரப்பிள்ளைகள் நோக்குகின்றனர் எனக் கூறினார்.

தாத்தாக்களாகிய நாம், நம் அனுபவத்திலிருந்து வாழ்வின் நல்லுணர்வைப் பேரப்பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என்றும், தாத்தாக்கள், தங்கள் வாழ்வின் நிலையைச் சலித்துக்கொள்ளாமல், அனுபவங்களால் நல்லுணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், நல்கனவு காண அழைக்கப்பட்டுள்ள நாம், நம் கனவை இக்கால இளையோருக்கு அளிக்க வேண்டும் என்றும், அது அவர்களுக்குத் தேவைப்படுகின்றது என்றும், நம் கனவுகளிலிருந்து, அவர்கள் முன்னோக்கிச் செல்வதற்கு சக்தியைப் பெறுகின்றனர் என்றும், திருத்தந்தை கூறினார்.

லூக்கா நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள சிமியோன், அன்னா ஆகிய இரு முதியவர்களும், எவ்வளவு கனவைக் கொண்டிருந்தனர் எனத் தெரிவித்த திருத்தந்தை, தாத்தாக்களாக, உயிர்த்துடிப்பான வாழ்வை இளையோருக்கு வழங்குமாறு, இன்று ஆண்டவர் நம்மிடம் கேட்கிறார் என்றும் கூறினார்.

தன்னோடு இத்திருப்பலியை நிறைவேற்றிய கர்தினால்கள் எல்லாருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது பாவங்களுக்காக மன்னிப்பு கேட்பதாகவும், விசுவாசத்திலும், நம்பிக்கையிலும், பிறரன்பிலும் தொடர்ந்து உறுதியுடன் வாழ்வதற்கு, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஜூன் 28, இப்புதன், ஜூன் 29, இவ்வியாழன் ஆகிய நாள்களில் நடைபெறவிருக்கும் கர்தினால்கள் நிகழ்வில் கலந்துகொள்வதற்கு, ஏற்கனவே உரோம் வந்திருக்கும் கர்தினால்கள் உட்பட ஏறக்குறைய நூறு கர்தினால்கள் இத்திருப்பலியை, திருத்தந்தையுடன் இணைந்து நிறைவேற்றினர்.

1992ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி, அர்ஜென்டீனா நாட்டுத் தலைநகர் புவனோஸ் அய்ரெய் உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக, கர்தினால் Antonio Quarracino அவர்களால் திருப்பொழிவு செய்யப்பட்டார், இயேசு சபை அருள்பணி Jorge Mario Bergoglio. இவரே, திருத்தந்தை பிரான்சிஸ் ஆவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

27/06/2017 14:43