2017-06-27 15:12:00

ஒருபுறம் அமைதி ஒப்பந்தம், மறுபுறம் கொலைகள்


ஜூன்,27,2017. மத்திய ஆப்ரிக்க குடியரசில், உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கு, ஜூன் மாதம் 19ம்தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளபோதிலும், இன்னும் மோதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பது குறித்து, தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

மத்திய ஆப்ரிக்க அரசுக்கும், ஏனைய அரசியல் மற்றும் இராணுவ குழுக்களுக்குமிடையே கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தம், அந்நாட்டின் நான்காண்டுப் போரை முடிவுக்குக் கொணரும் என்ற நம்பிக்கையை பொய்யாக்கி, தற்போது, கடந்த சில வாரங்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட மக்களின் உயிர்களைப் பலிவாங்கி உள்ளது என, தங்கள் அறிக்கையில் கூறியுள்ள மத்திய ஆப்ரிக்க குடியரசின் ஆயர்கள், ஒருவரால் மற்றவர், துன்பங்களை அனுபவிக்கும் நிலை இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க, அனைவரும் முயலவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.

மற்றவர்களின் கருத்துக்களை வரவேற்பதும், அவர்களோடு ஒத்துழைப்பதுவுமே, உண்மையான கருத்துப் பரிமாற்றங்களுக்கும் ஒப்புரவுக்கும் ஏற்ற வழி எனவும் கூறுகிறது, ஆயர்களின் அறிக்கை.

அழிவின் ஆயுதங்களை அகற்றி, மரணக் கருவிகளாகச் செயல்படுவதை விட்டு விலகி, மற்றவர்கள் குறித்த அச்சத்தை வெற்றி கண்டு, நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில், அனைவரின் திறமைகளையும் ஒன்றிணைப்பதே, இன்றையத் தேவையாக உள்ளது என தங்கள் அறிக்கையில், மேலும் விண்ணப்பித்துள்ளனர் மத்திய ஆப்ரிக்க குடியரசின் ஆயர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.