2017-06-27 15:23:00

கருக்கலைப்பு என்பது நல ஆதரவுப்பணியின் அங்கமில்லை


ஜூன்,27,2017. ஐ.நா. நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பணிகள் வழியாக, தற்போது வழங்கப்பட்டுவரும் MISP எனும், ஆரம்பகால குறைந்தபட்ச சேவைப் பைகள் என்ற நல ஆதரவுப் பைகளில், கருக்கலைப்பு சாதனங்களும் வழங்கப்படுவது குறித்து, தன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது திருஅவை.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கு, திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், ஐ.நா. அவை நடத்திய, 'ஐக்கிய நாடுகள் அவையின் அவசரகால மனிதாபிமான உதவிகளின் ஒத்துழைப்பை பலப்படுத்தல்' என்ற கூட்டத்தில் உரையாற்றியபோது, திருப்பீடத்தின் இந்த எதிர்ப்பை வெளியிட்டார். அவசரகால உதவிகள் பொறுத்தவைகளில், ஐ.நா. அமைப்புக்களிடையே குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பு இடம்பெற்று வருவது, மகிழ்ச்சியைத் தருகின்றபோதிலும், நல ஆதரவுத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கருக்கலைப்பு சாதனங்களை, கருத்தாங்கும் வயதிலுள்ள பெண்களுக்கு வழங்குவது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார் பேராயர்.   

நலஆதரவுத் திட்டங்கள் எனபவை, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளமுடியாத உயிர்களுக்கு எதிரான திட்டங்களுக்கு, எக்காலத்திலும், ஆதரவு அளிப்பதாக இருக்க முடியாது என்பதையும், வலியுறுத்திய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், உணவுப் பாதுகாப்பு, நலஆதரவு உதவிகள் என்ற வரிசையில், கருக்கலைப்பையும் இணைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என, திருப்பீடத்தின் எதிர்ப்பையும் பதிவுசெய்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.