2017-06-27 14:28:00

சொமாலி அகதிகளிடையே கென்ய திருஅவை


ஜூன்,27,2017. சொமாலியாவில் தீவிரவாதக் குழுக்களின் வன்முறைகளுக்குப் பயந்து, அந்நாட்டிலிருந்து வெளியேறி கென்யாவிற்குள் அடைக்கலம் தேடியுள்ள மக்களை மீண்டும் சொமாலியாவிற்கே திருப்பி அனுப்பும் கென்ய அரசின் முடிவு தவறானது என கவலையை வெளியிட்டுள்ளார்,  கென்ய ஆயர் ஜோசப் அலக்ஸாண்டர்.

சொமாலியாவில் சித்ரவதைகளை அனுபவித்த மக்கள், கென்யாவிலும் வேண்டப்படாதவர்களாக நடத்தப்படுவது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது, மற்றும், அநீதியானது என்றார் கென்ய ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் ஆணைக்குழு தலைவர், ஆயர் அலக்ஸாண்டர்.

அண்மையில் கென்யாவிலிருந்து சொமாலியாவுக்குத் திரும்பிய ஒரு புலம்பெயர்ந்தோர் குடும்பத்தினர், அந்நாட்டில் தங்கள் நான்கு குழந்தைகளையும் இழந்து, தற்போது கென்யாவிற்கே திரும்பி வந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ஆயர் அலக்ஸாண்டர் அவர்கள், கத்தோலிக்க காரித்தாஸ் மற்றும் ஏனைய கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்களின் உதவியுடன், சொமாலியப் புலம்பெயர்ந்த மக்களுடன், கென்யத் திருஅவை பணியாற்றி வருவதாகவும், அகதிகள் ஒருநாளும் திருஅவையால் கைவிடப்பட மாட்டார்கள் எனவும் எடுத்துரைத்தார்.

ஆகஸ்ட் மாதம் கென்யாவில் இடம்பெறவுள்ள அரசுத்தலைவர் தேர்தலில், புலம்பெயர்ந்தோருக்கெதிரான உள்ளூர் மக்களின் வாக்குகளைப் பெறும்பொருட்டு, சொமாலி அகதிகளைத் திருப்பி அனுப்ப, அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.