2017-06-27 15:16:00

நவீன அடிமைத்தனம் பற்றி லித்துவேனிய நாடாளுமன்றத்தில்..


ஜூன்,27,2017. லித்துவேனிய அரசு, மனித வர்த்தகம் மற்றும், நவீன அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு எடுத்துவரும் முயற்சிகளை ஊக்கப்படுத்தினார், பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் கர்தினால், வின்சென்ட் நிக்கோல்ஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தூண்டுதலால், 2014ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தூய மார்த்தா குழுவின் தலைவர் என்ற வகையில், லித்துவேனிய நாடாளுமன்றத்தில் (Seimas), உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்த கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், இத்திங்களன்று உரையாற்றி, அந்நாட்டு பிரதமர் Saulius Skvernelis அவர்களையும் சந்தித்து,  மனித வர்த்தகத்திற்கு எதிரான அந்நாட்டு அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தார்.

அடிமைத்தனத்திற்கு எதிராய்ச் செயல்படும் ஒரு தனிப்பட்ட குழுவின் இயக்குனரான Kevin Hyland என்பவரோடு லித்துவேனிய நாட்டிற்குச் சென்ற கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், மனித வர்த்தகம் மற்றும், நவீன அடிமைத்தனத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு, கத்தோலிக்கத் திருஅவை, எவ்வாறு தன்னை அர்ப்பணித்துள்ளது என்பது பற்றியும் விளக்கினார். 

மனித வர்த்தகமும், அடிமைத்தனமும், மனிதரின் அடிப்படை மாண்பைச் சீர்குலைத்து, மனிதரை வர்த்தகப் பொருளாக ஆக்குகின்றது என்றும், தீமையான இந்நடவடிக்கை, விண்ணை நோக்கி அழுகுரல் எழுப்புகின்றது என்றும், லித்துவேனிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார், கர்தினால் நிக்கோல்ஸ்.

இன்றைய உலகில், 2 கோடிக்கு மேற்பட்டவர்கள், நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளனர் என்றும், இது மனிதக் குடும்பத்தின் முகத்தில், மிகவும் வெட்கத்துக்குரிய அடையாளத்தைப் பதிக்கின்றது என்றும், கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.