சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ இரக்கத்தின் தூதர்கள்

சாம்பலில் பூத்த சரித்திரம் : திருத்தூதர்கள் காலம் பாகம் 23

தூய பவுல் - RV

28/06/2017 16:42

ஜூன்,28,2017. திருத்தூதர் பவுல், தனது இரண்டாவது நற்செய்தி தூதுரைப் பயணத்தில்,  எபேசு நகரில் நீண்ட காலம் தங்கவில்லை. அச்சமயத்தில் எருசலேமில் நடந்த பாஸ்கா விழாவில் கலந்துகொள்வதற்காக அந்நகரிலிருந்து புனித பூமிக்குப் பயணமானார். ஆனால், எபேசு நகரைவிட்டுச் செல்கையில், மீண்டும் அங்கு வருவதாகச் சொல்லிச் சென்றார். எனவே, பவுல், தனது மூன்றாவது நற்செய்தி தூதுரைப் பயணத்தை ஆரம்பித்தபோது எபேசு நகரமே அவரது மனதில் இருந்தது. எபேசு செல்லும் வழியில் கலாத்தியா பகுதியின் சில நகரங்களைப் பார்வையிட்டு, அங்கு கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை ஆழப்படுத்தியபின், எபேசு சென்று, அங்கு இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினார் பவுல். எபேசு நகரம், தொடக்ககால கிறிஸ்தவத்தில், முக்கியமான மையமாக இருந்தது. பழங்கால கிரேக்க நகரமான எபேசு, தற்போது, துருக்கி நாட்டின் Selçuk நகருக்குத் தென்மேற்கே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கடற்கரை நகரமாகும். கி.மு.பத்தாம் நூற்றாண்டில், அயோனியன் கிரேக்க காலனியாளர்களால் கட்டப்பட்ட இந்நகரம், கி.மு.129ம் ஆண்டில், உரோமன் குடியரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின், செழிப்படையத் தொடங்கியது. ஏறக்குறைய கி.மு.550ம் ஆண்டில், கட்டிமுடிக்கப்பட்ட அர்த்தமி கோவில், இந்நகருக்கு அருகிலிருப்பதாலும், இந்நகரம் புகழ்பெற்றிருந்தது. அர்த்தமி கோவில், தொன்மை கால உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும். எபேசு நகரிலுள்ள, 25 ஆயிரம் பேர் அமரக்கூடிய நாடக அரங்கமும் புகழ்பெற்றது. மேலும், விவிலியத்தின் திருவெளிப்பாட்டு நூலில் குறிக்கப்பட்டுள்ள ஏழு ஆசியத் திருஅவைகளில் எபேசும் ஒன்றாகும், ஐந்தாம் நூற்றாண்டில் நடந்த பல கிறிஸ்தவப் பொதுச் சங்கங்கள், எபேசு நகரில் நடைபெற்றுள்ளன. கி.பி.431ம் ஆண்டில், உரோமைப் பேரரசர் 2ம் Theodosius அவர்களால், எபேசில், நடத்தப்பட்ட ஆயர்கள் பொதுச் சங்கத்தில்தான், அன்னைமரியா, உண்மையிலேயே கடவுளின் தாய் என்று அறிவிக்கப்பட்டது.

இவ்வளவு வரலாற்றுப் புகழ்மிக்க எபேசு நகரத்தில், கி.பி.53ம் ஆண்டில், தனது மூன்றாவது நற்செய்தி தூதுரைப் பயணத்தைத் தொடங்கினார், திருத்தூதர் பவுல். இந்நகரில், தனது கூடாரத் தொழிலையும் செய்துகொண்டு நற்செய்தியும் அறிவித்தார். நோயாளரைக் குணமாக்கியது, பொல்லாத ஆவிகளை விரட்டியது என, எண்ணற்ற அற்புதங்களையும், அந்நகரில் ஆற்றினார் பவுல். அச்சமயத்தில், சுற்றித் திரிந்து பேயோட்டும் யூதர் சிலர், பொல்லாத ஆவி பிடித்திருந்தவர்கள்மீது, ஆண்டவராகிய இயேசுவின் பெயரைப் பயன்படுத்த முயன்றனர். “பவுல் அறிவிக்கின்ற இயேசுவின் பெயரால் நான் உங்களுக்கு ஆணையிடுகிறேன்”என்று அவர்கள் கூறிவந்தார்கள். ஆனால், பொல்லாத ஆவி அவர்களிடம், “இயேசுவை எனக்குத் தெரியும்; பவுலையும் எனக்குத் தெரியும்; ஆனால் நீங்கள் யார்?” என்று கேட்டது. பொல்லாத ஆவி பிடித்தவர், அவர்கள்மீது துள்ளிப் பாய்ந்து அவர்களைத் தாக்கி அனைவரையும் திணறடிக்கவே, அவர்கள் காயமுற்றவராய் ஆடையின்றித் தப்பியோடினர். எபேசில் குடியிருந்த யூதர், கிரேக்கர் அனைவருக்கும் இது தெரியவந்து, யாவரையும் அச்சம் ஆட்கொண்டது. அவர்கள் ஆண்டவர் இயேசுவின் பெயரைப் போற்றிப் பெருமைப்படுத்தினார்கள். நற்செய்தியில் நம்பிக்கை கொண்டோர் பலரும், தாங்கள் செய்த தவற்றை ஒப்புக்கொண்டு அறிக்கையிட்டனர். மாயவித்தைகளைச் செய்துவந்த பலரும் தங்கள் நூல்களைக் கொண்டு வந்து அனைவர் முன்பாகவும் அவற்றைச் சுட்டெரித்தனர்; அவற்றின் விலை ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசு என்று கணக்கிட்டனர். இவ்வாறு ஆண்டவரின் வார்த்தை ஆற்றல் பொருந்தியதாய்ப் பரவி வல்லமையுடன் செயல்பட்டது.   

அக்காலத்தில், எபேசு நகரில், கிறிஸ்தவ நெறியைக் குறித்து பெருங்கலகம் ஏற்பட்டது. அங்கே இருந்த தெமேத்திரியு என்னும் பெயருடைய தட்டான், அர்த்தமி கோவிலின் வடிவத்தை வெள்ளியில் செய்வித்து, அதனால் கைவினைஞர்களுக்கு மிகுந்த வருவாய் கிடைக்கச் செய்தார். அவர், இதே தொழில் செய்யும் அனைவரையும் ஒருங்கிணைத்து, திருத்தூதர் பவுலுக்கு எதிராகத் தூண்டிவிட்டார். எபேசில் மட்டுமின்றி, ஏறக்குறைய ஆசியா முழுவதிலுமே, “மனித கையால் செய்யப்பட்டவை தெய்வங்களல்ல”என்று தவறாகக் கூறித் திரளான மக்களை, இந்தப் பவுல் நம்பச் செய்து வருகிறார். இது நமக்கு ஆபத்து விளைவிக்கும்; நம் தொழிலும் மதிப்பற்றுப்போகும். அதோடு பெருந்தேவதையான அர்த்தமியின் கோவில்கூடத் தன் பெயரை இழந்துவிடும். அதுமட்டுமின்றி, ஆசியா முழுவதும், ஏன் உலக முழுவதுமே, வழிபடுகின்ற நம் தேவதையின் மாண்பும் மங்கிப் போகுமே!” என்றார். இதனால் எபேசில் கலகம் மூண்டது. பவுலும், எபேசைவிட்டு, மாசிதோனியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் குளிர் காலமாக இருந்ததால், துரோவா நகரில் சில மாதங்கள் தங்கினார். கிரேக்கத்தின் வட பகுதிக்குப் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கு, ஏற்ற காலநிலை வரும்வரை அங்கேயே தங்கி இருந்தார். காலநிலை கைகொடுத்தபோது, பவுலும், அவருடைய தோழர்களும், மாசிதோனியா சென்று, ஏறக்குறைய 18 மாதங்கள் அங்கு தங்கியிருந்தனர். பவுலை பலமுறை கொலைசெய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டதால், அவர் கொரிந்துக்கு கப்பல் ஏறாமல், துரோவா சென்றார்.

துரோவா நகரில் பவுலுடன் பலர், வழிபாட்டுக்காகக் கூடியிருந்தனர். மறுநாள் பவுல் புறப்பட வேண்டியிருந்ததால், நள்ளிரவு வரை அவர் அவர்களோடு தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தார். யூத்திகு என்னும் இளைஞர் ஒருவர் பலகணியில் உட்கார்ந்திருந்தார். பவுல் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்; தூக்கத்தில் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்தார்; அவரை அவர்கள் பிணமாகத்தான் தூக்கி எடுத்தார்கள். பவுல் அந்த இளைஞருக்கு உயிர் கொடுத்தார். உயிர்பெற்ற இளைஞரை, விசுவாசிகள் அழைத்துச்சென்று, மிகவும் ஆறுதல் அடைந்தார்கள். பவுல் தன் தோழர்களுடன் கப்பல் பயணம் செய்வதற்குப் பதிலாக, ஆசோசுக்கு, மலைப்பகுதி வழியாக இருபது மைல் தூரம் நடந்தே சென்றார் பவுல். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

28/06/2017 16:42