2017-06-28 16:04:00

மறைக்கல்வியுரை : மறைசாட்சிகளின் மனவலிமையெனும் எதிர்நோக்கு


ஜூன்,28,2017. கோடை வெப்பம் உரோம் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்த நிலையில், இப்புதனன்று காலை, வெப்பம் குறைந்து, மழை வருவதுபோன்ற ஒரு சூழல் உருவாகியது. இருப்பினும், திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரையை செவிமடுக்க வந்த கூட்டத்திற்கு குறைவில்லை. உள்ளூர் நேரம், ஏறத்தாழ, 10 மணிக்குத் துவங்கிய திருத்தந்தை  பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வி உரை, 11.15 மணியளவில் நிறைவடைந்தபின், மழை, இலேசாக, அதுவும், ஒரு சில நிமிடங்கள் மட்டும் தூறியது. இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வியுரை, 'ஓநாய்களிடையே ஆடுகளைப்போல் உங்களை அனுப்புகிறேன்...... என் பெயரின் பொருட்டு அனைவரும் உங்களை வெறுப்பர்' என இயேசு, தன் பன்னிரு சீடர்களிடம் கூறியதை மையமாக வைத்து வழங்கப்பட்டது.

அன்பு சகோதர சகோதரிகளே! கிறிஸ்தவ எதிர்நோக்குக் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, மறைசாட்சிகளின் எடுத்துக்காட்டுக்கள் குறித்து நோக்குவோம். இயேசுவின் மீது அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்திற்காக உயிரையே விடுமளவிற்கு அவர்களுக்கு வலிமையை வழங்கியது, அவர்கள் கொண்டிருந்த எதிர்நோக்கேயாகும். இறையரசை அறிவிக்கையில், பாவமும் அநீதியும் நிறைந்த இவ்வுலகிலிருந்து பகைமையையும் எதிர்ப்பையும் சந்திக்கவேண்டியிருக்கும் என இயேசு தன் சீடர்களை எச்சரித்தார். மரணம் மற்றும் பாவத்தின்மீது இயேசு கொண்ட வெற்றியின்மீது நம்பிக்கைக் கொள்வதன் வழியாகவும், பழிவாங்கும் எண்ணம், பகைமை மற்றும் வன்முறைகளை ஒதுக்கித் தள்ளுவதன் வழியாகவும், செல்வம், அதிகாரம் ஆகியவற்றின் மீதான ஆசையிலிருந்து விலகி நிற்கும் தங்கள் வாழ்வு வழியாகவும், நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறார் இயேசு. இயேசுவைப் பின்பற்றும் நமக்குத் தெரியும், ஆண்டவர் நம்மை எந்நாளும் கைவிடுவதில்லை என்று. இயேசு தன்னையே பலியாக்கியதையும், அவர் அன்பையும் பின்பற்றி, அவரில் நம் விசுவாசத்தையும் எதிர்நோக்கையும் நாம் வெளிப்படுத்துகிறோம்.  அதன் வழியாக, இவ்வுலகின் முன்னால் நாம் சாட்சிகளாக விளங்குகிறோம். இவ்வகையில் நோக்கும்போது, ஒவ்வொரு கிறிஸ்தவரும் மறைசாட்சியாகிறார், விசுவாசத்தால் தூண்டப்படும் உறுதியான எதிர்நோக்கின் சாட்சியாகிறார். இன்றும் விசுவாசத்திற்காக தங்கள் வாழ்வை கையளிக்கும் மறைசாட்சிகள், அதனை அன்பினால் ஆற்றுகின்றனர். அவர்களின் எடுத்துக்காட்டு மற்றும் பரிந்துரை வழியாக நாமும், நம்பத்தகும் சாட்சிகளாக மாறுவோமாக. இயேசுவின் வாக்குறுதிகளில் நாம் கொண்டுள்ள இறவா நம்பிக்கைக்கும், நம் தினசரி வாழ்வு நடவடிக்கைகள் வழியாக சாட்சிகளாக செயல்படுவோமாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரையும் வாழ்த்தி, அவர்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.