சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ நீதிப் பணி

ஆயுதங்கள் பெருகி வருவது, பெரும் அச்சுறுத்தலாக உள்ளது

ஈராக் நாட்டில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் - REUTERS

29/06/2017 15:25

ஜூன்,29,2017. மக்களைப் பெருமளவு அழிக்கும் வல்லமை பெற்ற ஆயுதங்கள் பெருகி வருவது, அகில உலக அரசுகளின் ஆளுமைத் திறனுக்கும், மக்களின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையில் உரையாற்றினார்.

நியூ யார்க் நகரில், ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா அவர்கள், ஐ.நா. பாதுகாப்பு அவையின் கூட்டமொன்றில் இப்புதனன்று உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

"'இனி ஒருபோதும் வேண்டாம்' என்று பொதுவில் பறைசாற்றிக்கொண்டு, அதே நேரம், ஆயுத உற்பத்தியையும் பெருக்கிக் கொண்டிருக்கிறோம்" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியச் சொற்களை தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் அவுசா அவர்கள், கடந்த ஆண்டு ஐ.நா. அவையில் ஒருமனதாக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானம் இன்றும் முழுமையாக பின்பற்றப்படவில்லை என்பதை எடுத்துரைத்தார்.

ஆயுதங்களுக்கு கணக்கற்ற தொகை செலவிடப்படுவதன் காரணமாக, மக்களின் முன்னேற்றம் பெருமளவு தடைபடுகின்றது என்பதைக் குறிப்பிட்டு கவலை வெளியிட்ட பேராயர் அவுசா அவர்கள், மக்களின் முன்னேற்றமும், உலக அமைதியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது என்பதையும் சுட்டிக்காட்டினார்.                 

நாடுகளிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க ஆயுதங்களை நம்புவதை விடுத்து, பேச்சு வார்த்தைகளை நம்புவதற்கு, அனைத்து அரசுகளும் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று, பேராயர் அவுசா அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

29/06/2017 15:25