2017-06-29 15:15:00

கல்விப்பணியில் கத்தோலிக்கத் திருஅவை, பல நூற்றாண்டுகளாக...


ஜூன்,29,2017. தகுதியான, தரமான, கல்வி வசதிகள் அனைவருக்கும் சமமான முறையில் கிடைப்பதை, திருப்பீடம் வலியுறுத்துகிறது என்று திருப்பீட உயர் அதிகாரி பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா அவர்கள், ஐ.நா. அவை கூட்டம் ஒன்றில் கூறினார்.

நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளும் கல்வியும் என்ற கருத்தில், ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற பேராயர் அவுசா அவர்கள், இப்புதனன்று தன் கருத்துக்களை பகிர்ந்த வேளையில் இவ்வாறு கூறினார்.

பல நூற்றாண்டுகளாக கல்விப்பணியில் ஈடுபட்டுள்ள கத்தோலிக்கத் திருஅவை, கத்தோலிக்கர் அல்லாத மற்றவர்களுக்கு, குறிப்பாக, கல்வி வசதிகளற்ற இடங்களில் வாழ்வோருக்கு கல்வியை எடுத்துச் செல்வதில் தீவிரப் பணியாற்றியுள்ளது என்பதை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

கல்வி பெறும் உரிமை, மனிதர்களின் அடிப்படை உரிமை என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரைகளிலும், எழுத்து வடிவிலும் கூறி வருவதை தன் உரையில் குறிப்பிட்ட பேராயர் அவுசா அவர்கள், நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளின் ஒரு முக்கிய பணி கல்விப்பணி என்று எடுத்துரைத்தார்.

கல்வி வசதியற்ற குழந்தைகளையும் இளையோரையும் மனதில் வைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நிறுவப்பட்ட Scholas Occurrentes என்ற அமைப்பைக் குறித்து தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் அவுசா அவர்கள், தரமான, சமமான கல்வியே எதிர்காலத்திற்கு பாதுகாப்பை வழங்கமுடியும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.