2017-06-29 14:35:00

பாசமுள்ள பார்வையில்: மகனுக்காக பொறுமையுடன் செபிக்கும் தாய்


வட ஆப்ரிக்காவின் தற்போதைய அல்ஜீரிய நாட்டில், தகாஸ்தே (Tagaste) எனும் ஊரில் கி.பி.331ம் ஆண்டில் பிறந்தவர் மோனிக்கா. அந்நிய தெய்வங்களை வணங்கிவந்த பத்ரீசியுஸ் என்பவருக்கு, இருபதாவது வயதில், இவர் மணமுடித்துக் கொடுக்கப்பட்டார். கடுங்கோபக்காரரான கணவரையும், கொடுமையான மாமியாரையும் சமாளிக்க வேண்டிய சூழல் மோனிக்காவுக்கு. ஏழைகளுக்கு உதவுவது, செபிப்பது போன்ற இவரின் செயல்கள், இவரது கணவருக்கு எரிச்சலூட்டின. இத்தம்பதியருக்குப் பிறந்த குழந்தைகளில், இரு ஆண் மற்றும், ஒரு பெண் குழந்தைகள் உயிர் தப்பினர். மோனிக்காவின் பொறுமை நிறைந்த இடைவிடா செபம் மற்றும், நற்பண்புகளால், கி.பி. 370ம் ஆண்டில், இவரது கணவர் கிறிஸ்தவரானார். அதற்கு அடுத்த ஆண்டிலே கணவர் காலமானார். அப்போது மூத்த மகனான அகுஸ்தீனுக்கு வயது 17. கார்த்தேஜ் நகரில் பயின்ற அகுஸ்தீன், சோம்பேறியாக, ஊர் சுற்றியாக மற்றும், ஒழுக்கமற்றவராக வாழ்ந்து வந்தார். மணிக்கேய தப்பறைக் கொள்கையையும் இவர் ஏற்று வாழ்ந்தார். ஒரு கட்டத்தில், தாய் மோனிக்கா, அகுஸ்தீனை தனது வீட்டில் உண்ணவோ, உறங்கவோ அனுமதிக்கவில்லை. மோனிக்கா, ஆயர் ஒருவரிடம் அடிக்கடி சென்று, தன் மகனின் நிலைக்காகக் கண்ணீர் சிந்தினார். ஒருசமயம், ஆயர் பொறுமை இழந்தவர்போல் காணப்பட்டாலும், இவ்வாறு சொன்னார். இவ்வளவு கண்ணீர் சிந்தும் ஒரு தாயின் மகன் அழிவுறவே முடியாது என்று. இந்நிலையில், ஒருநாள் மோனிக்கா, மகன் அகுஸ்தீன் விசுவாச வாழ்வை ஏற்பதாகக் கனவு கண்டார். அந்நாளிலிருந்து மகனுக்காக நோன்பிருந்து செபித்தார் தாய். மகன் விரும்பியதைவிட, அவர் மீது அதிக அன்பு செலுத்தினார். அகுஸ்தீனுக்கு 29 வயது நடந்தபோது, அவர் உரோம் நகர் சென்று, போதிக்கத் தீர்மானித்தார். அதை விரும்பாத, தாய் மோனிக்காவும், மகனுடன் செல்லத் தீர்மானித்தார். ஒருநாள், அகுஸ்தீன், தாயிடம், கப்பல் பழுதுபார்க்குமிடத்தில் தன் நண்பரிடம் சென்று பிரியாவிடை சொல்லச் செல்வதாகப் பொய் சொல்லிவிட்டு உரோமைக்குச் சென்றார், இதனால் மிகவும் வேதனையடைந்தாலும், மகனைப் பின்தொடர்ந்தார் தாய் மோனிக்கா. உரோம் சென்றடைந்தபோது அகுஸ்தீன் மிலான் சென்றுவிட்டதை அறிந்தார் மோனிக்கா. அக்காலத்தில் பயணம் கடினமாக இருந்தாலும், மோனிக்காவும் மிலான் சென்றார். அங்கே புனித ஆயர் அம்புரோசினால், புனித வாழ்வு வாழத் தொடங்கினார் அகுஸ்தீன். மகனுக்காக, பல ஆண்டுகள் இடைவிடாமல் மன்றாடிய தாய் மோனிக்காவின் செபத்திற்குப் பலனும் கிடைத்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.