2017-06-29 14:56:00

புனித பேதுரு, பவுல் பெருவிழாவில் திருத்தந்தையின் மறையுரை


ஜூன்,29,2017. விசுவாச அறிக்கை, பெரும் இன்னல், வேண்டுதல், என்ற மூன்றும், திருத்தூதர்களின் வாழ்க்கையில் முக்கியமான பங்கேற்றன என்பதை, திருத்தூதர்களான புனித பேதுரு, பவுல் திருநாள் நமக்கு உணர்த்துகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை மறையுரை வழங்கினார்.

ஜூன் 29, இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட புனிதர்களான பேதுரு, பவுல் பெருவிழா திருப்பலியை, வத்திக்கான், புனித பேதுரு வளாகத்தில் தலைமையேற்று நடத்தியத் திருத்தந்தை, இன்றைய வழிபாட்டு வாசகங்களை மையப்படுத்தி வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.

"மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" (மத்தேயு 16: 13) என்ற பொதுப்படையான கேள்விக்கு அடுத்ததாக, "ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று இயேசு கேட்டபோது, பேதுரு மட்டுமே, " நீர் மேசியா, வாழும் கடவுளின் மகன்" (16:16) என்று பதில் கூறியதால், தன் விசுவாசத்தை அறிக்கையிட்டார் என்று திருத்தந்தை தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

இதே கேள்வி நம்மிடம் இன்று கேட்கப்படும்போது, நமது பதில் பொதுப்படையாக, மேலோட்டமாக இருக்கிறதா அல்லது, நம் வாழ்வில் விளங்கும் விசுவாசத்தின் வெளிப்பாடாக விளங்குகிறதா என்ற கேள்வியை திருத்தந்தை தன் மறையுரையில் எழுப்பினார்.

ஆழத்திற்குச் செல்ல அஞ்சியவர்களாய், ஆபத்தைக் கண்டு விலகிச் செல்லும் அரைமனது விசுவாசத்துடன் நாம் வாழ்கிறோமா என்பதை ஆய்வு செய்யும்படி, திருத்தந்தையின் மறையுரை அழைப்பு விடுத்தது.

"நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன்" (2 திமோ. 4:6) என்று திருத்தூதர் பவுல் கூறும் சொற்களை தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, சிலுவையின்றி, கிறிஸ்துவோ, கிறிஸ்தவரோ இருக்க இயலாது என்பதை வலியுறுத்திக் கூறினார்.

'நல்லதொரு போராட்டம்' என்று புனித பவுல் குறிப்பிடுவது, அவர் தனக்காக வாழாமல், கிறிஸ்துவுக்காக வாழ்ந்த வாழ்க்கையையும், அதனால், தன் உடல்நலத்தை இழந்தாலும், விசுவாசத்தை இழக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது என்று திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

விசுவாசத்தை அறிக்கையிடுவதால், போராட்டங்கள் சூழப்பட்ட திருத்தூதரின் வாழ்வு, வேண்டுதல்களால் தாங்கி நிற்கப்படுகின்றது என்பதை, திருத்தந்தை தன் மறையுரையின் மூன்றாவது கருத்தாக முன்வைத்தார்.

திருத்தூதர்கள் வாழ்வுப்பயணத்தில் உடன் சென்ற ஆண்டவர், கர்தினால்கள், பேராயர்களின் வாழ்விலும் உடன் வருகிறார் என்பதை, தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டத் திருத்தந்தை, பேராயர்கள் பெறும் பாலியம் என்ற தோள்பட்டை, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மந்தையை அவர்கள் தோள்களில் தங்கிச்செல்ல வலிமை தரும் என்று சுட்டிக்காட்டினார்.

இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட புனிதர்களான பேதுரு, பவுல் திருநாளன்று, கடந்த ஓராண்டில் பேராயர்களாக நியமனம் பெற்ற 36 பேராயர்களில் 32 பேருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாலியம் என்ற தோள்பட்டையை அணிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.