2017-06-30 15:09:00

அணு ஆயுதங்கள் அற்ற உலகை அமைப்பதற்கு இளையோர்


ஜூன்,30,2017. அணு ஆயுதங்கள் அற்ற உலகை அமைப்பதற்கும், அணுப் பரிசோதனை புரிந்துணர்வு தடை ஒப்பந்தத்தை (CTBT) அமல்படுத்துவதற்கும், சமூக வலைத்தளங்கள் உதவுமாறு, 54 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய நூறு இளையோர் பன்னாட்டு கூட்டம் ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில், இவ்வெள்ளியன்று நிறைவடைந்த, அறிவியலும் தொழில்நுட்பமும் என்ற தலைப்பில் நடந்த பன்னாட்டுக் கூட்டத்தில் பேசிய இளையோர், இவ்வாறு கூறினர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட டல்லஸ் பல்கலைக்கழக மாணவர் கார்லோஸ் ரொட்ரிகெஸ் கூறுகையில், இளையோராகிய நாங்கள் அரசுத் தலைவர்களோ அல்லது, பொதுவான கொள்கையின்மீது தாக்கம் ஏற்படுத்தக்கூடிய செல்வாக்கான நிலையில் உள்ளவர்களோ அல்ல எனினும், இவ்விவகாரம் குறித்து, நாங்கள் இணைந்து குரல் எழுப்ப விரும்புகிறோம் என்று கூறினார்.

வருங்காலத் தலைமுறைகள் அனுபவிக்கக்கூடிய, அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த ஓர் உலகில், நாம் வாழ்வதை உறுதி செய்வதற்கென, எல்லைகளைக் கடந்து, அணு ஆயுதத் தடைக்கு குரல் கொடுக்க விரும்புகிறோம் என்று, ரொட்ரிகெஸ் அவர்கள், மேலும் கூறினார்.

வியன்னாவில் நடந்த இக்கூட்டத்தில், ஏறக்குறைய ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.