2017-06-30 14:43:00

மத்திய கிழக்கின் அதிகாரப் போட்டிக்கு சிரியா பலிகடா


ஜூன்,30,2017. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மனிதரால் ஏற்படுத்தப்பட்ட மிக மோசமான, மனிதாபிமானப் பேரிடர் என, சிரியா நாட்டின் தற்போதைய நிலை பற்றிக் கவலையுடன் தெரிவித்தார், சிரியா நாட்டு திருப்பீடத் தூதர், கர்தினால் மாரியோ செனாரி.

சிரியா எதிர்கொள்ளும் துன்பங்கள் பற்றி, La Stampa என்ற இத்தாலிய தினத்தாளுக்கு அளித்த நீண்ட நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ள, கர்தினால் செனாரி அவர்கள், சிரியாவில் உள்நாட்டுச் சண்டை தொடங்கியதிலிருந்து, நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் மற்றும், 85 விழுக்காட்டு மக்கள் வறுமையில் வாழ்கின்றனர் என்று கூறினார்.

சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டுச் சண்டை பற்றிக் கூறிய கர்தினால் செனாரி அவர்கள், சிரியா, ஏனைய வல்லமைமிக்க நாடுகளால், துண்டு துண்டாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும், சிரியாவில், பல நாடுகள் தங்களின் படைகளை நிறுத்தியிருக்கின்றன என்றும், கவலை தெரிவித்தார்.

மத்திய கிழக்கில், அதிகாரத்திற்காகப் போட்டியிடும் இரு முக்கிய எதிரிகளான சவுதி அரேபியா மற்றும், ஈரானுக்கிடையே தூதரக ஒப்பந்தம் ஏற்பட்டால், ஈராக், சிரியா மற்றும், ஏமன் நாடுகளின் பெருமளவு பிரச்சனைகள் தீர்க்கப்படும் எனவும் கருத்து தெரிவித்தார், கர்தினால் செனாரி.

ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் எழுச்சி பற்றிய கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் செனாரி அவர்கள், இது சிரியாப் பிரச்சனையின் மையம் அல்ல, ஆனால் இது கூடுதலாக வந்த அழிவு சக்தி என்றார்.    

ஆதாரம் : CWN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.