2017-06-30 14:51:00

‘கிறிஸ்துவுக்காகத் தம்பதியர்’ குழுவுக்கு பாராட்டு


ஜூன்,30,2017. பிலிப்பீன்ஸ் நாட்டில் ஏழைகளுக்கு குடியிருப்புக்களை வழங்கிவரும், பொதுநிலை கத்தோலிக்க குழு ஒன்றிற்கு, தன் பாராட்டுதல்களைத் தெரிவித்தார், தென்னாப்ரிக்க கர்தினால், வில்ஃபிரட் ஃபாக்ஸ் நேப்பியெர் (Wilfrid Fox Napier).

கடந்த வாரத்தில் பிலிப்பீன்சில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, டர்பன் பேராயர், கர்தினால், நேப்பியெர் அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டில் இயங்கிவரும், ‘கிறிஸ்துவுக்காகத் தம்பதியர்’ (CFC) என்ற பொதுநிலையினர் குழு, கடவுள் தங்களுக்கு அளித்துள்ள கொடைகள் மற்றும், அழைப்புக்கேற்ப செயல்பட்டு வருகின்றது எனப் பாராட்டிப் பேசினார்.

அந்நாட்டின் ஆபத்தான பகுதிகளிலும், மனிலாவின் தெருக்களிலும் வாழ்ந்த ஏழைக் குடும்பங்களுக்கு, இக்குழுவினர் அமைத்துக் கொடுத்துள்ள வீடுகளையும் பார்வையிட்டார், கர்தினால், நேப்பியெர்.

மேலும், இக்குழுவின் 36வது ஆண்டு நிறைவு விழாவிலும் கலந்துகொண்டு உரையாற்றிய, கர்தினால், நேப்பியெர் அவர்கள், குடும்பங்கள், திருஅவை மற்றும், உலகில் கிறிஸ்துவைத் தாங்கிச் செல்பவர்களாகச் செயல்படுங்கள் என, இக்குழுவினரைக் கேட்டுக்கொண்டார்.

CFC குழு, உலகுக்கு கடவுள் அளித்துள்ள கொடை என்றும், குடும்ப வாழ்வைப் புதுப்பிப்பதற்கு இக்குழு அயராது உழைக்கின்றது எனவும் உரைத்தார், தென்னாப்ரிக்க  கர்தினால், நேப்பியெர்.

ஜூன் 24, கடந்த சனிக்கிழமையன்று மனிலாவில் நடைபெற்ற இவ்விழாவில், 114 நாடுகளிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் உட்பட, ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.