சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வத்திக்கான் \ நிகழ்வுகள்

உலகிலிருந்து பசியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமெனில்.......

FAO நிறுவனத்தில் கர்தினால் பரோலின் - ANSA

03/07/2017 15:55

ஜூலை.03,2017. உலகிலிருந்து பசியையும் சத்துணவின்மையையும் அகற்றும் முயற்சிகளுக்கு திருஅவை எப்போதும் தன் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதாக, FAO எனப்படும் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் 40வது பொதுஅவைக்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

FAO நிறுவன தலைமையகக் கூட்டத்தில் திருப்பீடச் செயலர், கர்தினால் பியேத்ரோ பரோலின் வழியாக தன் செய்தியை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவருக்கும் தினசரி உணவை வழங்கிவிட்டால் மட்டும் போதாது, மாறாக, உணவைப் பெறுவதற்கு அவர்களுக்கிருக்கும் உரிமை மதிக்கப்பட்டு, ஒருமைப்பாட்டை வளர்க்க உதவவேண்டும் என தெரிவித்துள்ளார்.

உலகிலிருந்து பசியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமெனில், உதவி தேவைப்படும் மக்களுக்கு செயலாக்கமுடைய உதவியை வழங்கும் அனைத்துலக சமூகத்தின் கடமை ஏற்றுக்கொள்ளப்பட்டு, செயல்படுத்தப்படவேண்டும் எனவும், திருத்தந்தையின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய உலகின் சில பகுதிகளில் காணப்படும் ஏழ்மையும் வளர்ச்சியின்மையும், பலரின் பாராமுகத்தாலும், சிலரின் பேராசையாலும் உருவானவை என்பதை உணர்ந்து, அதற்கேற்றாற்போல், அதற்கியைந்த நடவடிக்கைகளை அனைத்துலக சமூகம் எடுக்கவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை.

போர்கள், உள்நாட்டு மோதல்கள் மற்றும் மக்கள் தங்கள் உறைவிடங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுதல் போன்றவையும் உணவு உற்பத்தியை வெகுவாகப் பாதித்துள்ளதாக உரைக்கும் திருத்தந்தையின் செய்தி, போராலும் வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனம், விதைகளை வழங்கியும், வேறுபல திட்டங்கள் வழியாகவும் ஆற்றிவரும் பணிகளுக்கு, தன் பராட்டுக்களை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

03/07/2017 15:55