2017-07-03 16:17:00

இயேசுவோடு உள்ள உறவுக்கு முதலிடம் கொடுக்க திருத்தந்தை


ஜூலை,03,2017. பொதுநிலையினரோ, அர்ப்பண வாழ்வு வாழ்பவரோ, ஆயரோ, அருள்பணியாளரோ, யாராக இருந்தாலும், அனைவரும், எல்லாவற்றுக்கும் மேலாக, இயேசுவோடு உள்ள உறவுக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென, இஞ்ஞாயிறன்று கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (மத்.10,37-42) மையப்படுத்தி, நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் வாழ்வில் இயேசுவுக்கு முதலிடம் கொடுத்தால், அது முழுமையானதாக இல்லாமல் இருந்தாலும்கூட, உலகில் கிறிஸ்து போன்று வாழ்வதற்கு உதவும் என்றும் கூறினார்.

கிறிஸ்தவ மறைபோதகச் சீடத்துவத்தின் இன்றியமையாதப் பண்புகள் பற்றிய சிந்தனைகளை எடுத்துரைத்த திருத்தந்தை, இயேசுவைச் சந்திக்கிறாயா? இயேசுவிடம் செபிக்கின்றாயா? போன்ற கேள்விகளை, ஒவ்வொரு கிறிஸ்தவரிடமும் முதலில் கேட்க வேண்டும் எனக் கூறினார்.

இயேசுவுக்காக ஒருவர் எல்லாவற்றையும் துறந்தார் என்றால், அவரில் மக்கள், ஆண்டவரைக் கண்டுகொள்வார்கள் என்றும், ஒவ்வொரு நாளும் அவர் தன்னைப் புதுப்பித்து, சோதனைகளை வெற்றி காண இது உதவும் என்றும், திருத்தந்தை கூறினார்.

வாழ்வு முழுவதும் இயேசுவை மையமாகக் கொண்டிருக்கவும், இரண்டு காலணிகளில் ஒரே காலை வைக்கும், ஏமாற்று இதயத்தைக் கொண்டிருக்க வேண்டாமெனவும், தாங்கள் புனித அருள்பணியாளர்களாக வாழ்வதற்கு, இறைமக்கள் சமுதாயம் உதவ வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

எல்லாவற்றுக்கும் மேலாக இயேசுவை அன்புகூர்வதற்கு அன்னைமரியிடமிருந்து கற்றுக்கொள்வோம் எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ஜூலை 5, வருகிற புதனன்று சுதந்திர தினத்தைச் சிறப்பிக்கும் வெனிசுவேலா நாட்டில், அமைதியும் ஒப்புரவும் ஏற்படுவதற்கு, ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வெனிசுவேலா மக்களுடன், செபம் நிறைந்த தனது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்த திருத்தந்தை, அந்நாட்டுப் பாதுகாவலரான Coromoto அன்னையின் பரிந்துரையைக் கேட்பதாகவும், தெருக்களில் தங்களின் பிள்ளைகளை இழந்த குடும்பங்களுடன், ஆன்மீக முறையில், தான் மிக நெருக்கமாக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் தொடர்ந்து நிலவும் பதட்ட நிலைகளால், இதுவரை, ஏறக்குறைய நூறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.