2017-07-03 16:22:00

நிலஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு திருத்தந்தை உதவி


ஜூலை.03,2017. ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட கிரேக்கத்தின் லெஸ்போஸ் நகரின் மக்களுக்கு உதவும் நோக்கில் 50,000 யூரோக்களை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிரேக்கத் தீவான லெஸ்போசில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென இப்பணம் திருத்தந்தையால் வழங்கப்பட்டுள்ளதாக கிரேக்க நாட்டிற்கான திருப்பீடத்தூதரகம் தெரிவித்தது.

எதிர்பாராதவகையில் திருத்தந்தையிடமிருந்து வந்துள்ள இந்த உதவித்தொகை, அவரின் அன்பையும் அருகாமையையும் வெளிப்படுத்தும் ஒன்றாகவும், கிரேக்க கத்தோலிக்க திருஅவையுடன் அவர் கொண்டுள்ள ஒன்றிப்பை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது என திருப்பீடத் தூதரகத்தின் அறிக்கை கூறுகிறது.

திருத்தந்தையின் இந்த உதவியைப் பெறவுள்ள Vrisa என்ற பகுதி, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களையே அதிகம் கொண்ட இடமாகும். இப்பகுதியில் ஏறத்தாழ 50 கத்தோலிக்கர்களே வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “ஒவ்வொரு தெருவுக்கும், மூலைக்கும், இயேசுவை மகிழ்வுடன் எடுத்துச்செல்லும், 'சாலைவழி போதகர்களாக' இளையோரை பார்ப்பது, எவ்வளவு அழகாக உள்ளது” என, தன் டுவிட்டர் பக்கத்தில், இஞ்ஞாயிறன்று எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.