சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ அரசியல், பொருளாதாரம்

அர்ப்பணமும், அந்த அர்ப்பணத்தை செயலாக்கும் உறுதியும் தேவை

FAO எனப்படும் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் இயக்குனர், José Graziano da Silva - ANSA

04/07/2017 15:01

ஜூலை.04,2017. உலகில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை, கடந்த இரண்டாண்டுகளில் அதிகரித்துள்ளதாக, FAO எனப்படும் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் இயக்குனர், José Graziano da Silva அவர்கள் அறிவித்தார்.

உலக உணவு நிலைகள் குறித்து இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் FAO நிறுவனத்தின் கருத்தரங்கில் உரையாற்றிய, Graziano da Silva அவர்கள், 2015ம் ஆண்டிலிருந்து இன்றுவரையுள்ள நிலவரப்படி, பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது எனவும், 2015ம் ஆண்டுவரைக் கண்டுவந்த முன்னேற்றத்தில் இது ஒரு பின்னடைவாக இருப்பதாகவும் கூறினார்.

இன்றைய உலகில், பசியால் வாடும் மக்களுள் 60 விழுக்காட்டினர், போர் மற்றும் காலநிலை மாற்றங்களால் பாதிப்படைந்த நாடுகளில் வாழ்வதாகவும் கூறினார் Graziano da Silva.

தொடர்ந்து பலகாலமாக உணவு நெருக்கடியை சந்தித்துவரும் நாடுகளாக, 19 நாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள FAO நிறுவனம், இதற்கு, வறட்சியும் வெள்ளப்பெருக்குமே, முக்கிய காரணம் எனவும் தெரிவிக்கிறது.

இத்தகைய உணவு நெருக்கடி நிலைகளால், புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கையும் உலகில் அதிகரித்து வருவதாகக் கூறிய இயக்குனர், Graziano da Silva அவர்கள்,  உணவு நெருக்கடியைக் களைவதற்கு, அமைதி என்பது இன்றியமையாதது, ஆனால், அமைதி கிட்டும்வரை மக்களைப் பட்டினியால் வாடவிட முடியாது எனவும் கூறினார்.

அரசியல் அர்ப்பணம் தேவைப்படும் அதேவேளை,  அந்த அர்ப்பணங்களைச் செயலாக்கும் உறுதியும் தேவை என, மேலும் கூறினார் FAO இயக்குனர் Graziano da Silva.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

04/07/2017 15:01