2017-07-04 15:07:00

115 பிறரன்பு திட்டங்களுக்கு உதவும் இத்தாலிய ஆயர்கள்


ஜூலை.04,2017. இத்தாலிய மக்கள் தங்கள் ஊதியத்திலிருந்து விருப்பப்பட்டு கொடுக்கும் நிதியைக் கொண்டு, 115  பிறரன்பு திட்டங்களுக்கு உதவ உள்ளதாக இத்தாலிய ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

பிறரன்பு திட்டங்களுக்கென, தங்கள் ஊதியத்திலிருந்து 0.8 விழுக்காட்டை வழங்கி வரி விலக்குப் பெறலாம் என்ற அரசின் திட்டத்தின்கீழ், திருஅவையின் பிறரன்பு திட்டங்களுக்கு என, கிட்டியுள்ள 1 கோடியே 30 இலட்சம் யூரோக்களைக் கொண்டு ஆப்ரிக்காவுக்கு 89 பிறரன்பு திட்டங்களையும், இலத்தீன் அமெரிக்காவுக்கு 12 திட்டங்களையும், ஆசியாவுக்கு 13 திட்டங்களையும், மத்திய கிழக்குப் பகுதிக்கு ஒரு திட்டத்தையும் வகுத்துள்ளது, இத்தாலிய ஆயர் பேரவை.

ஆப்ரிக்கக் கண்டத்தின் புர்க்கினோ ஃபாசோ நாட்டில், போதைப்பொருளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு மறுவாழ்வு மையத்தில், குடிநீர் வசதிகளை வழங்கவும், புருண்டியில் மனித உரிமைகள் பயிற்சி மையம் ஒன்றை அமைக்கவும், டோகோ நாட்டில் மருத்துவமனை ஒன்று அமைக்கவும், காங்கோ குடியரசில் இனவெறியால் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் குடியமர்த்தவும் என, பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது இத்தாலிய ஆயர்கள் பேரவை.

பிறரன்பு நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக, இத்தாலியர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து வழங்கும் இத்தொகையை, ஏழை நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கென தொடர்ந்து செலவளித்து வருகிறது இத்தாலிய ஆயர் பேரவை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.