சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ இரக்கத்தின் தூதர்கள்

சாம்பலில் பூத்த சரித்திரம் : திருத்தூதர்கள் காலம் பாகம் 24

உரோமின் புனித பவுல் பசிலிக்கா - ANSA

05/07/2017 15:21

ஜூலை,05,2017. இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை, திருத்தூதர் பவுல் போதித்தவேளையில், மக்களில் ஏற்பட்ட மனமாற்றத்தைக் கண்டு அஞ்சிய தலைவர்கள், அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து, கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டனர். திருத்தூதர் பவுல், கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு, யூதத் தலைவர்கள் முன் விசாரிக்கப்பட்ட ஒவ்வொரு முறையும், அவர் நற்செய்தியைத் துணிச்சலுடன் எடுத்துரைத்து வந்தார். பவுல், மோசே சட்டத்திற்கும், எருசலேம் ஆலயத்திற்கும் எதிராக போதிக்கிறார் என்றும், யூதரல்லாத பிற இனத்தவரை எருசலேம் ஆலயத்துக்கு அழைத்துவந்து, ஆலயத்தைத் தீட்டுப்படுத்துகிறார் என்றும், குற்றம் சாட்டப்பட்டார். இறுதியாக பவுல் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின்முன் கொண்டு செல்லப்பட்டபோது, நான் சீசருடைய நடுவர் மன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்; அங்குதான் எனக்குத் தீர்ப்பு வழங்கப்படவேண்டும். நான் யூதருக்கு எதிராக எந்தத் தீங்கும் செய்யவில்லை. நான் மரண தண்டனைக்குரிய குற்றம் ஏதாவது செய்திருந்தால் அத்தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், இவர்கள் என்மீது சுமத்தும் குற்றச் சாட்டுகளில் உண்மை எதுவும் இல்லையெனில், என்னை யாரும் இவர்களிடம் ஒப்புவிக்க முடியாது. சீசரே என்னை விசாரிக்க வேண்டும்”என்று கேட்டுக்கொண்டார். எருசலேமில் பவுலை விசாரித்த தலைவர்களும், இவர் மரண தண்டனைக்கோ, சிறைத் தண்டனைக்கோ உரிய குற்றம் எதையும் செய்யவில்லையே” என ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். பவுல் உரோமைக் குடிமகன் என்பதால், அவரின் விருப்பத்தை ஏற்று, பவுலையும், வேறுசில கைதிகளையும், எருசலேமிலிருந்து இத்தாலிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இவர்கள் கப்பல் பயணம் மேற்கொண்டபோது, கடலில் பேய்ப்புயல் வீசியது. கடலில் பல இன்னல்களுக்கு உள்ளாகி, பசி பட்டினியை அனுபவித்து, இறுதியாக மால்ட்டா தீவில் கரை சேர்ந்தனர். அத்தீவு மக்கள், இவர்களிடம் மிகுந்த மனிதநேயத்துடன் நடந்து கொண்டனர் என, திருத்தூதர் பணிகள் நூல் சொல்கிறது. மழை பெய்து குளிராயிருந்த காரணத்தால், அவர்கள் தீ மூட்டி இவர்கள் அனைவரையும் அருகே அழைத்துச் சென்றனர். பவுல் சுள்ளிகளைப் பொறுக்கிச் சேர்த்துத் தீயில் போட்டபோது, ஒரு விரியன் பாம்பு சூட்டின் மிகுதியால் வெளியே வந்து, அவரது கையைப் பற்றிக் கொண்டது. அவர் கையில் பாம்பு தொங்குவதை அத்தீவினர் பார்த்தபோது, “இவன் ஒரு கொலைகாரன் என்பது உறுதி. கடலிலிருந்து இவன் தப்பித்துக் கொண்டாலும் நீதியின் தெய்வம் இவனை வாழவிடவில்லை”என்று ஒருவரோடு ஒருவர் சொல்லிக் கொண்டார்கள். ஆனால் பவுல் அந்தப் பாம்பை நெருப்பில் உதறினார். அவருக்குக் கேடு எதுவும் நேரிடவில்லை. அவருக்கு வீக்கம் ஏற்படப் போகிறது அல்லது, திடீரெனச் செத்து விழப்போகிறார் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும், அவருக்குத் தீங்கு எதுவும் ஏற்படாததைக் கண்டு, தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்கள்; அவர் ஒரு தெய்வம் என்று சொல்லத் தொடங்கினார்கள்.

மால்ட்டா தீவின் தலைவரான புப்பிலியு என்பவருடைய நிலங்கள், இவர்கள் கரையேறிய  இடத்துக்கு அருகில் இருந்தன. புப்பிலியு இவர்களை வரவேற்று மூன்று நாள் அன்புடன் விருந்தோம்பினார். புப்பிலியுவினது தந்தை காய்ச்சலினாலும் வயிற்று அளைச்சலாலும் நோயுற்றுக் கிடந்தார். பவுல் அங்குச் சென்று, அவர்மேல் தம் கையை வைத்து இறைவனிடம் வேண்டி அவரை நலமாக்கினார். இந்நிகழ்ச்சிக்குப்பின் அத்தீவில் நோயுற்றிருந்த ஏனையோரும் பவுலிடம் வந்து குணமடைந்தனர். அவர்கள், பவுலுக்கும், அவரோடு இருந்தவர்களுக்கும் மதிப்பு அளித்து, அவர்கள் உரோமைக்குக் கப்பலேறியபோது, தேவையான அனைத்துப் பொருள்களையும் கொடுத்தார்கள். ஏறத்தாழ கி.பி. 60ம் ஆண்டில் உரோம் வந்து சேர்ந்த பவுல், இரண்டு ஆண்டுகள் வாடகை வீட்டில் தங்கியிருந்தாலும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அந்நிலையிலும், தம்மிடம் வந்த அனைவரையும் வரவேற்று, இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி முழுத் துணிவோடு தடையேதுமின்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார் என்று, திருத்தூதர் பணிகள் நூலை நிறைவு செய்திருக்கிறார், நற்செய்தியாளர் புனித லூக்கா.

உரோமையில் பவுல் விடுதலை செய்யப்பட்ட பிறகு, தனது நற்செய்தி தூதுரைப் பயணங்களை மீண்டும் தொடங்கினார். இவர் எபேசு, மிலேத்து, துரோவா ஆகிய நகரங்களுக்குச் சென்றிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. திருத்தூதர் பவுல், இஸ்பெயின் நாட்டிற்கும் நற்செய்தி அறிவிக்கச் சென்றார் எனச் சொல்லப்படுகின்றது. திருத்தந்தை முதலாம் கிளமென்ட், பவுல், மேற்கின் கடைகோடிக்குச் சென்று, கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார் என்றும், புனித ஜான் கிறிஸ்சோஸ்தம், எருசலேம் நகர் புனித சிரில் ஆகியோர், பவுல் உரோமையில் நற்செய்தி அறிவித்தபின் இஸ்பெயின் சென்று நற்செய்தி அறிவித்தார் என்றும் எழுதியுள்ளனர். உரோமைப் பேரரசர் நீரோ காலத்தில், உரோம் நகர் தீப் பற்றியெரிந்து, அந்நகரையே அழித்தது. உரோம் நகரை மீண்டும் கட்டியெழுப்ப நினைத்த நீரோ மன்னனே, நகருக்குத் தீ வைத்தான் எனச் சொல்லப்பட்டாலும், அப்பழி கிறிஸ்தவர்கள் மீது சுமத்தப்பட்டு, கொடுமையாய்த் துன்புறுத்தப்பட்டனர். இந்தத் தீ நிகழ்வுக்குப் பின்னர், திருத்தூதர்கள் பேதுருவும், பவுலும், மீண்டும் கைது செய்யப்பட்டனர். இத்திருத்தூதர்கள் இருவரும் உரோம் நகரில் சிறையில் வைக்கப்பட்டிருந்த இடங்கள், அவர்களின் கைவிலங்குகள் எல்லாவற்றையும் இன்றும் காணலாம். இவர்கள் சிறையிலிருந்த இடத்தில், காவல் காத்துவந்த காவலர், இவர்களால் மனந்திரும்பி, கிறிஸ்தவராக விரும்பினார். திருமுழுக்குக் கொடுப்பதற்கு தண்ணீர் தேவைப்பட்டபோது, இவர்கள் இருந்த இடத்தை கையால் தோண்டவே தண்ணீர் ஊற்றெடுத்துள்ளது. அந்த இடத்தைப் பார்த்தால், பாறையாகத் தெரிகின்றது. இன்றும் அந்த இடத்தில் தண்ணீர் இருப்பதை, சுற்றுலா பயணிகள், வியந்து பார்க்கின்றனர்.  

திருத்தூதர் பவுல் துரோவாவில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக அவர் மீண்டும் உரோமைக்கு அனுப்பப்பட்டார். பவுல், உரோமையில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, கி.பி. 67ம் ஆண்டில் தலைவெட்டிக் கொலை செய்யப்பட்டார். பவுல், உரோமைக் குடிமகன் என்பதால், அவரைச் சிலுவையில் அறைந்து கொலை செய்யாமல், உரோம் நகர் மதில் சுவருக்கு வெளியே,  ஓஸ்தியா வாயிலுக்கருகில் வெட்டிக் கொலை செய்துள்ளனர். அச்சமயத்தில் இவரின் தலை, மூன்று இடங்களில் துடித்து விழுந்ததாகவும், அந்த இடங்களில் நீர் ஊற்று தோன்றியதாகவும் பாரம்பரியமாகச் சொல்லப்படுகிறது. இந்த இடங்களையும் திருப்பயணிகள் வந்து பார்த்து பரவசமடைந்து செல்கின்றனர். பவுலின் கல்லறைமீது, பிரமாண்டமான பசிலிக்கா கட்டப்பட்டுள்ளது. திருத்தூதர் பேதுரு, வத்திக்கான் குன்றில், தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். அந்த இடத்தில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயம் கட்டப்பட்டுள்ளது. இத்திருத்தூதர்கள் இறந்து ஓராண்டு சென்று, பேரரசன் நீரோ மாண்டான். திருஅவையின் இருபெரும் தூண்கள் என அழைக்கப்படும் திருத்தூதர்கள் பேதுரு, பவுல் ஆகிய இருவரின் பெரிய திருவுருவங்கள், தூய பேதுரு பசிலிக்காவின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ளன.

திருத்தூதர்கள் வரலாற்றில், தூய யோவான் தவிர, ஒவ்வொருவருமே மறைசாட்சி மரணங்களையே ஏற்றுள்ளனர். கிறிஸ்தவம் வளரத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை, எண்ணற்ற கிறிஸ்தவர்கள், தங்களின் விசுவாசத்திற்காகக் கொலை  செய்யப்பட்டு வருகின்றனர். இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கந்தமால் மாவட்டத்தில் நடந்த கிறிஸ்தவர்கெதிரான வன்முறைகள், லிபியா கடற்கரையில் வரிசையாக முழங்காலில் அமர்த்தப்பட்டு கொல்லப்பட்ட எகிப்து கிறிஸ்தவர்கள், எகிப்தில் சீனாய் திருத்தலத்திற்குப் பேருந்தில் சென்றவர்களை இடைமறித்து, கொலை செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், இன்னும், சிரியா நாடு உட்பட மத்திய கிழக்கில் துன்புறும் கிறிஸ்தவர்கள் என, இக்காலத்தில் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இந்த மறைசாட்சிகளின் இரத்தம், கிறிஸ்தவம் மேலும் வளரவே உதவுகின்றது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் கிறிஸ்தவம் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு மத்தியில், அது தழைத்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். அதேநேரம், வரலாற்றில் கிறிஸ்தவர்களால் துன்பங்களை அனுபவித்தவர்களும் உள்ளனர். கடந்தகாலத் தவறுகளுக்காக, திருத்தந்தையர் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.

கிறிஸ்தவத்தை அழித்துவிடுவோம் என்று கொக்கரித்த எவரும் வாழ்ந்ததில்லை என்பது உலக வரலாறு. கிறிஸ்தவத்தை எதிர்த்தவர்களில், உரோமைப் பேரரசர்களைக் காட்டிலும் அதிகக் கொடூரமாய் எதிர்த்தவர்கள் எவரும் இல்லை. உரோமைப் பேரரசன் நீரோ, அமைதியை இழந்து, கவலையின் மிகுதியால் தற்கொலை செய்து கொண்டு மடிந்தான். அடுத்து ஆட்சிக்கு வந்த, தொமீஷியன், தன் வேலைக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டான். பேரரசரன் ஏட்டிரியன், கொடிய நோயால் தாக்கப்பட்டு கொடூர வேதனையோடு இறந்தான். பேரரசரன் செவ்ரஸ், தன் மக்களின் துரோகத்தாலேயே மரணமடைந்தான். பேரரசரன் மாக்சிமுஸ், மூன்றே ஆண்டுகள் ஆட்சிசெய்து, அகால மரணமடைந்தான். பேரரசரன் தேஷியஸ், சேற்றில் புதையுண்டு மாண்டான். அவன் உடல் வெளியே எடுக்கமுடியாமல் போனது. பேரரசரன் வலேரியஸ், பெர்சியரால் பிடிபட்டு உயிரோடு தோலுரிக்கப்பட்டு மாண்டான். பேரரசரன் தியோக்னீஷியன், மனநலம் பாதிக்கப்பட்டு அலைந்தான். பேரரசரன் மேக்லிமனஸ், தற்கொலை செய்துகொண்டு செத்தான். இயேசுவின் பெயர், உலகத்தில் இல்லாதபடி அழித்து விடுவதாக உறுதிமொழி எடுத்த பேரரசரன் ஜுலியன், போரில் காயமடைந்து விழுந்து உயிர் பிரியும் வேளையில், தன் உடலிலிருந்து வடிந்த இரத்தத்தை கையிலே அள்ளி, வானத்துக்கு நேராக எறிந்து "நசரேயனே" நீயே வென்றாய், என்று கூறி உயிர்விட்டான். இறுதியில், உரோமைப் பேரரசராக கி.பி.306ம் ஆண்டில் ஆட்சியில் அமர்ந்த கான்ஸ்டன்டைன் (கி.பி.306–337), 312ம் ஆண்டில் கிறிஸ்தவத்தைத் தழுவினார். கி.பி.313ம் ஆண்டில் மிலான் அரச ஆணை வழியாக, உரோமைப் பேரரசில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறையை நிறுத்தச் செய்தார். சமய சகிப்புத்தன்மைக்கு வித்திட்டார்.

பேரரசர் கான்ஸ்டன்டைன், தனது தாய் ஹெலன் அவர்களால் கிறிஸ்தவத்தை ஏற்றிருக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது.  ஆயினும், செசாரியாவின் Eusebius மற்றும் சில கிறிஸ்தவ எழுத்தாளர்களின் கணிப்புப்படி, கி.பி.312ம் ஆண்டில், மில்வியன் பாலத்தில் Milvian Bridge நடைபெற்ற போருக்குமுன், கான்ஸ்டன்டைன், சூரியனைப் பார்த்தபோது, அதன்மேல் தெரிந்த ஒளிமயமான சிலுவையில், "இந்த அடையாளத்தில் நீ வெற்றியடைவாய் (Ἐν Τούτῳ Νίκα!)" என, கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தை அவர் பார்த்தார் என்றும், அதன்பின், தன் படைவீரர்களிடம், கேடயங்களை சிலுவையால் அலங்கரிக்க வேண்டுமென்று கூறியதாகவும், அந்தப் போரில் அவர் வெற்றியடைந்தார் எனவும், இதுவே அவர் கிறிஸ்தவ மறையை ஏற்கக் காரணம் என்றும் தெரிகின்றது.

ஆக, கிறிஸ்தவத்தை எவராலும் அழிக்க முடியவில்லை என்பது வரலாறு.  ஆண்டவர் இயேசு தம் மக்களை அற்புதமான வழியில் நடத்தி வருகிறார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறியிருப்பதுபோன்று, கிறிஸ்துவை தன் வாழ்வில் மையப்படுத்தி வாழ்வோர், கவலைப்பட அவசியமில்லை.

தொடக்க காலத்தில், கடும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் கிறிஸ்தவம் எவ்வாறு வளர்ந்தது என்பது பற்றி அடுத்த வார நிகழ்ச்சியில் பார்ப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

05/07/2017 15:21