2017-07-05 16:05:00

கர்தினால் Joachim Meisner மறைவுக்கு திருத்தந்தையின் அனுதாபம்


ஜூலை,05,2017. ஜூலை 5, இப்புதன் காலையில், கர்தினால் Joachim Meisner அவர்கள், இறையடி சேர்ந்ததையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அனுதாபத்தையும் செபங்களையும் தெரிவிக்கும் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.

ஜெர்மன் நாட்டு கொலோன் (Cologne) உயர் மறைமாவட்ட பேராயர், கர்தினால் Rainer Woelki அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள இத்தந்தியில், அம்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயரான கர்தினால் Meisner அவர்கள் கத்தோலிக்கத் திருஅவைக்கும், குறிப்பாக, ஜெர்மன் தலத்திருஅவைக்கும் ஆற்றிய பணிகளுக்காக இறைவனுக்கு நன்றி கூறியுள்ளார்.

1933ம் ஆண்டு கிறிஸ்மஸ் பெருவிழாவான டிசம்பர் 25ம் தேதி பிறந்த Joachim Meisner அவர்கள், 1962ம் ஆண்டு, அருள்பணியாளராகவும், 1975ம் ஆண்டு, ஆயராகவும் அருள்பொழிவு செய்யப்பட்டார்.

1980ம் ஆண்டு பெர்லின் ஆயராக பொறுப்பேற்ற Meisner அவர்கள், 1988ம் ஆண்டு, கொலோன் உயர் மறைமாவட்ட பேராயராக நியமிக்கப்பட்டு, 2014ம் ஆண்டு பணி ஒய்வு பெற்றார்.

1983ம் ஆண்டு திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்ட Meisner அவர்கள், 2017, ஜூலை 5, இப்புதனன்று, தன் 83வது வயதில் இறையடி சேர்ந்தார்.

கர்தினால் Meisner அவர்களின் மறைவையடுத்து, திருஅவையில் உள்ள 224 கர்தினால்களில், 121 பேர், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர்கள் என்பதும், 103 பேர் 80 வயதைக் கடந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.