2017-07-06 15:50:00

எருசலேமில், பாப்பிறை அறக்கட்டளை நடத்திய கல்வி மாநாடு


ஜூலை,06,2017. "பள்ளிக்கும், பல்கலைக் கழகத்திற்கும் இடையே, சந்திக்கும் கலாச்சாரத்தின் வழியே அமைதியைக் கட்டியெழுப்புதல்" என்ற தலைப்பில், ஜூலை 2ம் தேதி முதல் 5ம் தேதி முடிய, Scholas Occurrentes பாப்பிறை அறக்கட்டளை, எருசலேம் நகரில் ஒரு மாநாட்டை நடத்தியது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டீனாவில், புவெனஸ் அயிரஸ் பேராயராகப் பணியாற்றியபோது, 'சந்திக்கும் பள்ளிகள்' என்ற பொருள்படும் Scholas Occurrentes என்ற முயற்சியை துவக்கினார். இன்று, இந்த முயற்சி, அமெரிக்க, ஆப்ரிக்க, ஆசிய மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் பல இடங்களில் வளர்ந்து வருகின்றன.

தற்போது ஒரு பாப்பிறை அறக்கட்டளையாக உருவாகியிருக்கும் Scholas Occurrentes அமைப்பு, எருசலேம் நகரில் உள்ள எபிரேய பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், இஸ்ரேல், பாலஸ்தீனம், அர்ஜென்டீனா, பிரான்ஸ், கென்யா ஆகிய நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்த 75 இளையோரும், அமெரிக்கா, ஆசியா, ஆப்ரிக்கா கண்டங்களைச் சேர்ந்த 41 பல்கலைக் கழகங்களின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டின் இறுதி நாளான இவ்வியாழன் மாலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாநாட்டில் கலந்துகொண்டோருடன் தொலைக்காட்சி வழியே நேரடியாகத் தொடர்புகொண்டு பேசினார்.

இதைத் தொடர்ந்து, இளையோர், அந்த பல்கலைக் கழக வளாகத்தில், திருத்தந்தையின் பெயரால் ஒலிவ மரக்கன்றுகளை நட்ட நிகழ்வுடன் இந்த மாநாடு நிறைவு பெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.