2017-07-06 15:37:00

கல்விக்கூடங்கள், சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்க்கவேண்டும்


ஜூலை,06,2017. நமக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்வு அனைவருக்கும் பொதுவானது என்பதைக் கொண்டாட எருசலேமில் கூடியுள்ள உங்கள் அனைவரோடும், நானும் இணைந்து, வாழவைக் கொண்டாட விழைகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று வழங்கிய ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

'சந்திக்கும் பள்ளிகள்' என்ற பொருள்படும், Scholas Occurrentes என்ற பாப்பிறை அறக்கட்டளை அமைப்பு, ஜூலை 2, கடந்த ஞாயிறு முதல், 5 இவ்வியாழன் முடிய, எருசலேம் எபிரேய பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்துகொண்டோருடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணொளி வழியே, நேரடியாக தன் செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.

நம் ஒவ்வொருவரின் வாழ்வும் வெவ்வேறு கதைகளாக இருந்தாலும், நமது பொதுவான இல்லமான பூமி, நாம் சுவாசிக்கும் காற்று ஆகியவை, நம்மை ஒரே மனித குடும்பத்தில் ஒருங்கிணைக்கிறது என்று, திருத்தந்தை இச்செய்தியின் துவக்கத்தில் கூறியுள்ளார்.

பள்ளிகளில் நுழையும் சிறுவர், சிறுமியர், எவ்வித முற்சார்பு எண்ணங்களும் இன்றி தங்கள் கல்வியைத் துவக்குகின்றனர் என்று கூறிய திருத்தந்தை, இத்தகைய திறந்த மனதை தொடர்ந்து வளர்ப்பதற்கு, மற்றவர்களுக்குச் செவிமடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கல்விக்கூடங்கள், சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்க்கும் கருவிகளாக விளங்கவேண்டும் என்று தன் செய்தியில் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சந்திப்பின் வழியாகவே, நாம், இவ்வுலகில், அமைதியையும், புரிதலையும் கொண்டுவர முடியும் என்று எடுத்துரைத்தார்.

இஸ்ரேல், பாலஸ்தீனம், மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அனைவருக்கும் தன் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்த திருத்தந்தை, கனவு காணும் திறமை, படைப்பாற்றல், கொண்டாடும் மனநிலை ஆகியவற்றை இளையோர் இழந்துவிடக்கூடாது என்று, தன் செய்தியின் இறுதியில் வேண்டுகோள் விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.