2017-07-06 15:58:00

புனித திருத்தந்தையின் தகவல் தொடர்பு அதிகாரி மரணம்


ஜூலை,06,2017. திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை தலைமை அதிகாரியாக, 22 ஆண்டுகள் பணியாற்றி, 2006ம் ஆண்டில் ஓய்வுபெற்ற ஹுவாக்கின் நவாரோ-வால்ஸ் (Joaquín Navarro-Valls) அவர்கள், இப்புதனன்று உரோம் நகரில் காலமானார்.

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் 1984ம் ஆண்டு திருப்பீட தகவல் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர், அத்திருத்தந்தையின் பெரும்பாலானப் பயணங்களிலும், உடன் சென்றுள்ளதுடன், பல்வேறு அனைத்துலக கருத்தரங்குகளில் பங்குபெறும் திருப்பீடப்பிரதிநிதிகள் குழுவிலும் பங்குபெற்றுள்ளார்.

தன் 80ம் வயதில் மரணமடைந்துள்ள முன்னாள் திருப்பீடத் தகவல் தொடர்பு அலுவலகத் தலைவர் நவாரோ-வால்ஸ் குறித்து கருத்து தெரிவித்த இயேசு சபை அருள்பணி ஃபெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், நவாரோ வால்ஸ் அவர்களின் அறிவுத்திறன், செய்திகளை வழங்கும்விதம், நல்லுறவைப் பேணும் நிலை, பன்மொழித்திறன் ஆகியவற்றால் தான் கவரப்பட்டதாகவும், அவரைத் தொடர்ந்து அந்த பணியை தான் ஏற்றபோது அவரையே எடுத்துக்காட்டாகக் கொண்டதாகவும் கூறினார்.

2006ம் ஆண்டு, நவாரோ வால்ஸ் ஓய்வுபெற்றபோது, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் திருப்பீட தகவல் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட அருள்பணி லொம்பார்தி அவர்கள், கடந்த ஆண்டுவரை அப்பதவியை வகித்ததுடன், வத்திக்கான் வானொலியின் பொதுமேலாளராகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1936ம் ஆண்டு இஸ்பெயின் நாட்டில் பிறந்து மருத்துவப் படிப்பை முடித்து, திருப்பீட தகவல் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றி, இப்புதனன்று மரணமடந்த நவாரோ வால்ஸ் குறித்து, தன் பாராட்டுக்களை வெளியிட்ட தற்போதைய திருப்பீட தகவல் தொடர்பு அதிகாரி Greg Burke அவர்கள், தன் தொழிலில் மிக மேன்மையானவராகவும், அதேவேளை, மிக உன்னத கிறிஸ்தவராகவும் நவாரோ வால்ஸ் வாழ்ந்தார் என்று கூறினார்.

முன்னாள் திருப்பீட தகவல் தொடர்புத்துறை தலைமை அதிகாரி நவராரோ வால்ஸின் அடக்கத் திருப்பலி, இவ்வெள்ளியன்று உள்ளூர் நேரம் காலை 11 மணிக்கு, உரோம் நகர் புனித யூஜின் பசிலிக்காவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.