2017-07-06 16:14:00

வயது முதிர்ந்தோர் மீது காட்டப்படும் அக்கறை - பேராயர் அவுசா


ஜூலை,06,2017. வயது முதிர்ந்தோர், எண்ணிக்கையிலும், உலக மக்கள் தொகை கணக்கின் விழுக்காட்டு அளவிலும் உயர்ந்து வரும் வேளையில், வயது முதிர்ந்தோர் மீது நாம் காட்டும் அக்கறை ஒரு முக்கிய கருத்தாக மாறி வருகின்றது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நியூ யார்க் நகரின் ஐ.நா. தலைமையகத்தில், ஜூலை 5ம் தேதி முதல், 7ம் தேதி முடிய நடைபெறும் ஒரு கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்றுவரும் பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா அவர்கள், இவ்வியாழனன்று வழங்கிய ஓர் உரையில் இவ்வாறு கூறினார்.

"சமுதாய முன்னேற்றத்திற்கு வயது முதிர்ந்தோரின் பங்களிப்பு" என்ற தலைப்பில் நடைபெறும் இக்கூட்டத்தில் பேசிய பேராயர் அவுசா அவர்கள், இன்றைய மருத்துவ முன்னேற்றங்களால் மக்களின் சராசரி வயது கூடிவருவது குறித்து மகிழ்ந்தாலும், வயது முதிர்ந்தோருக்கு வழங்கப்படும் மரியாதை குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்தார்.

வறுமை, தனிமை, கவனிப்பாரற்று விடப்படுதல் என்ற பிரச்சனைகளை, ஒவ்வொரு நாட்டிலும், வயது முதிர்ந்தோர், பல வழிகளில் சந்தித்து வருகின்றனர் என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

"வயது முதிர்ந்தோரின் ஞானம் இவ்வுலகிற்குத் தேவை" என்ற கருத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவருவதை தன் உரையில் குறிப்பிட்ட பேராயர் அவுசா அவர்கள், சமுதாயக் கலந்துரையாடல்களில் வயது முதிர்ந்தோர் ஒதுக்கப்படும் நிலையைக் குறித்தும் எடுத்துரைத்தார்.

இறுதி நாள் வரை, வயது முதிர்ந்தோர் மாண்புடன் வாழ்வதற்கு உரிய வழிமுறைகளை, அரசுகளும், மனித சமுதாயங்களும், சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளன என்பதை, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.