2017-07-07 16:00:00

இறைஊழியர்கள், மறைசாட்சிகளின் வாழ்வுமுறை ஏற்பு


ஜூலை,07,2017. அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கென, இறைஊழியர் ஒருவரின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமை ஒன்றையும், ஐந்து இறைஊழியர்கள் மற்றும், இரு மறைசாட்சிகளின் புண்ணிய வாழ்வுமுறை குறித்த விவரங்களையும் ஏற்றுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட புனிதர்நிலை பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், இவ்வெள்ளி காலையில் திருத்தந்தையைச் சந்தித்து, இவ்விவரங்களைச் சமர்ப்பித்தார்.

போலந்து நாட்டின் வார்சாவில், 1902ம் ஆண்டில் பிறந்து, கிரக்கோவில் 1973ம் ஆண்டு காலமான, பொதுநிலை விசுவாசியான இறைஊழியர் Anna Chrzanowska அவர்களின் பரிந்துரையால் நடைபெற்றுள்ள புதுமை ஒன்றை ஏற்றுள்ளார் திருத்தந்தை. 

கொலம்பிய நாட்டின் Fortulலில், 1989ம் ஆண்டில் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்ட,  Arauca ஆயர் Jesús Emilio Jaramillo Monsalve, அந்நாட்டின் Armeroவில், 1948ம் ஆண்டில், விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்ட அருள்பணியாளர் Pietro Maria Ramírez Ramos ஆகிய இருவரின் வாழ்வுமுறைகளையும் ஏற்றுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

இன்னும், கொலம்பியாவின் பொகோட்டாவில், 1950ம் ஆண்டில் இறந்த, அந்நகரின் முன்னாள் பேராயர் Ismaele Perdomo,

போலந்து நாட்டின் Wieliczkaல் 1939ம் ஆண்டில் இறந்த, இறை ஊழியர்  Luigi Kosiba,  

இஸ்பெயின் நாட்டின் Murciaவில், 1913ம் ஆண்டில் இறந்த, பிரான்சிஸ்கன் தூயவர்கள் சபையைத் தொடங்கிய இறை ஊழியர் Paola di Gesù Gil Cano,

இத்தாலியின் பெர்கமோவில் 1950ம் ஆண்டில் இறந்த, சிறிய திருத்தூதர்கள் கிறிஸ்தவப் பள்ளி சபையைத் தொடங்கிய, இறை ஊழியர் Maria Elisabetta Mazza,

இத்தாலியின் நேப்பிள்ஸில், 1973ம் ஆண்டில் இறந்த இருஇதய திருத்தூதர்கள் சபையை ஆரம்பித்த, இறை ஊழியர் Maria Crocifissa dell’Amore Divino ஆகியோரின், புண்ணிய வாழ்வுமுறைகளையும் திருத்தந்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.