சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ ஞாயிறு சிந்தனை

பொதுக்காலம் 14ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” (மத்தேயு 11: 28) - RV

08/07/2017 14:02

1970ம் ஆண்டு, ஏப்ரல் 11ம் தேதி, அப்பொல்லோ 13 என்ற விண்வெளிக்கலம் நிலவை நோக்கிப் பாய்ந்தது. அதில் பயணம் செய்த James Lovell, John Swigert மற்றும் Fred Haise என்ற மூன்று விண்வெளி வீரர்களும் நிலவில் காலடி பதித்துவிட்டு, பூமிக்குத் திரும்பும் நோக்கத்துடன், இந்தப் பயணம் ஆரம்பமானது. ஆனால், அப்பொல்லோ 13 புறப்பட்டுச் சென்ற இரு நாட்களில், அக்கலத்திலிருந்த ஆக்சிஜன் பேழையொன்று வெடித்ததால், அந்த விண்வெளிக்கலம் மீண்டும் பூமிக்குத் திரும்பவேண்டியதாயிற்று. பல ஆபத்தான பிரச்சனைகளைச் சமாளித்து, விண்வெளி வீரர்கள் மூவரும் பத்திரமாக பூமிக்குத் திரும்பினர். அந்த ஆபத்து நேரத்தில் திறமையாகச் செயல்பட்ட தலைவன், James Lovell அவர்களை உலகமே பாராட்டியது. அவருக்கு விருதுகள் பல வழங்கப்பட்டன.

ஒருமுறை, Lovell அவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேளையில், "இந்த விபத்து நடந்தபோது, நீங்கள் அதிகம் கவலைப்பட்டீர்களா?" என்று ஒருவர் கேட்டார். அர்த்தமற்ற வகையில் அந்தக் கேள்வி கேட்டவரை, சூழ இருந்தவர்கள் கேவலமாகப் பார்த்தனர். ஆனால், Lovell அவர்கள், அவருக்கு அழகான பதிலொன்றைக் கூறினார்: "இல்லை. நான் கவலைப்படவில்லை. கவலைப்படுவது பயனற்ற ஓர் உணர்ச்சி. அங்கு எழுந்த பிரச்சனையைத் தீர்ப்பது ஒன்றே என் எண்ணங்களை நிறைத்திருந்தது. எனவே, கவலைப்பட எனக்கு நேரமில்லாமல் போனது" என்று Lovell அவர்கள் பதில் சொன்னதும், கூடியிருந்த அனைவரும் கரவொலி எழுப்பி, அவரைப் பாராட்டினர்.

'கவலைப்படுவது பயனற்றது' என்பது, நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஓர் உண்மை. கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? (மத்தேயு 6: 27) என்று இயேசு கேட்கும் கேள்வியை முற்றிலும் ஆமோதிப்பவர்களாக இருந்தாலும், கவலைப்படுவதை நாம் நிறுத்துவதில்லை. கவலை என்ற சுமையால் கனத்துப் போயிருக்கும் நமக்கு, இயேசு தரும் அற்புதமானத் தீர்வு, இன்றைய நற்செய்தியில் ஓர் அழைப்பாக ஒலிக்கிறது. “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” (மத்தேயு 11: 28) என்று இயேசு விடுக்கும் இந்த அழைப்பு, நம்மைச் சிந்திக்க அழைக்கிறது.

கேட்பதற்கு எளிதாக, இதமாக ஒலிக்கும் இவ்வழைப்பை நம்மில் பலர் முழுமையாக நம்பி, ஏற்றுக்கொள்வதில்லை. இயேசு கூறுவது, எதார்த்தமான, நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராத வார்த்தைகள் என்றும், இதை ஓர் ஆன்மீக அழைப்பாக மட்டுமே கருதமுடியும் என்றும் நாம் நினைக்கிறோம். வயதில் வளர்ந்துவிட்ட நாம், வாழ்வில் சந்திக்கும் கவலைகளை, சுமைகளைச் சமாளிக்க, பல அறிவுப்பூர்வமான வழிகளைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கருதுவதால், இயேசு விடுக்கும் அழைப்பு மிக எளிமையானதாக, சிறுபிள்ளைத்தனமாகத் தெரிகிறது. எனவே அதை முழுமனதுடன் ஏற்க நமக்குள் தயக்கம் உருவாகிறது.

நமது தயக்கத்தைப் புரிந்தவர்போல, இயேசு, இந்த அழைப்பை விடுப்பதற்கு முன், ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார். இது, இன்றைய நற்செய்தியின் முதல் பகுதியாக ஒலிக்கிறது. இயேசு விடுக்கும் அழைப்பைப் புரிந்துகொள்ள, நாம் குழந்தை மனம் பெற்றிருக்கவேண்டும் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார்.

நமது மனச்சுமைகளை, வாழ்வுச் சுமைகளை இறக்கிவைக்க, அல்லது அவற்றை மறப்பதற்கு உதவியாக இவ்வுலகம் காட்டும் வழிகள் ஏராளம். பிரச்சனைகளைத் தீர்ப்பதாக நினைத்துக்கொண்டு, இவ்வுலகம் காட்டும் தவறான பல வழிகளை எண்ணிப் பார்க்கும்போது, கதையொன்று நினைவுக்கு வருகிறது.

கோழிப்பண்ணை வைத்திருந்த ஒருவர், தன் பண்ணையில் திடீரென 10 கோழிகள் இறந்ததும், பயந்துபோய், அருகிலிருந்த கோழி வளர்ப்புத் துறையைத் தேடிச் சென்றார். தன் கோழிகள் இறந்த விடயத்தை அவர் சொன்னதும், அங்கிருந்த ஓர் அதிகாரி, மீதமுள்ள கோழிகளுக்கு 'ஆஸ்பரின்' மருந்தைக் கொடுக்கச் சொன்னார். கோழி வளர்ப்பவர், அந்த மருந்தைக் கொடுத்த இரண்டு நாட்களில், மீண்டும் 20 கோழிகள் இறந்தன. இம்முறை அவ்வதிகாரி, வேப்பெண்ணெயைக் கொடுப்பது நல்லது என்று சொல்லி அனுப்பினார். அவ்விதமே செயல்பட்ட கோழிப்பண்ணைக்காரர், இம்முறை 30 கோழிகள் இறந்தன என்று முறையிட்டார். இம்முறை, 'பெனிசிலின்' கொடுத்தால் எல்லாம் சரியாகும் என்று சொல்லி அனுப்பினார், அனைத்தும் தெரிந்த அவ்வதிகாரி. 'பெனிசிலின்' கொடுக்கப்பட்ட இரு நாட்களில் பண்ணையில் இருந்த அனைத்து கோழிகளும் இறந்தன. இதைக் கேள்விப்பட்ட அதிகாரி, "சே! என்ன அவமானம்! என்னிடம் இன்னும் பலவகை மருந்துகள் உள்ளனவே! அவற்றையெல்லாம் முயற்சி செய்வதற்கு முன், அனைத்து கோழிகளும், இப்படி, அவசரப்பட்டு, அநியாயமாய், இறந்துவிட்டனவே!" என்று வருத்தப்பட்டார்.

வேடிக்கையாக ஒலிக்கும் இந்த உவமை, இவ்வுலகின் போக்கை படம்பிடித்துக் காட்டுகிறது. பிரச்சனைகளை இவ்வுலகம் எவ்விதம் தீர்க்கின்றது என்ற பாடத்தையும் சொல்லித்தருகிறது. "பெருஞ்சுமை சுமந்திருப்போரே, வாருங்கள்! இதோ, உங்களுக்காகவே நாங்கள் உருவாக்கியுள்ள விடுமுறைத் திட்டம்!" என்றோ, "இந்த மாத்திரையை விழுங்கினால், பத்து நொடியில் பறந்திடும் உங்கள் சுமைகள்!" என்றோ கூவிக் கூவி விற்கும் எத்தனை விளம்பரங்களை நாம் பார்த்திருக்கிறோம்!

நாம் சுமக்கும் சுமைகளுக்கு, கடற்கரை விடுமுறைகள், மயக்கம்தரும் மருந்துகள், மதுபானங்கள், போதைப் பொருள்கள் போன்றவை, தீர்வாக அமையும் என்று, இவ்வுலகம் சொல்லித் தருகிறது. இத்தீர்வுகள், நம் சுமைகளை மறக்கவும், மறுக்கவும் தூண்டும், பொய்யான வழிகள். சுமைகளிலிருந்து தப்பிக்கும் வழிகள்.

இதற்கு நேர்மாறாக, இயேசு தருவது, பொய்யான, தவறான வாக்குறுதி அல்ல. சுமைகளுடன் அவரிடம் சென்றால், இளைப்பாறுதல் கிடைக்கும் என்பதே, அவர் தரும் வாக்குறுதி. என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். (மத்தேயு 11: 29) என்பது இயேசு விடுக்கும் அர்த்தமுள்ள அழைப்பு. இவ்வழைப்பில் இயேசு பயன்படுத்தும் நுகம் என்ற உருவகம், நம்மைச் சிந்திக்க அழைக்கிறது.

இரு மாடுகளைக் கொண்டு நிலத்தை உழும்போது, அவ்விரு மாடுகளும் இணைந்து செயல்பட, அவற்றின் கழுத்துப் பகுதியை இணைப்பதற்குப் பொருத்தப்படும் கட்டையை நுகம் என்று அழைக்கிறோம். கலிலேயா பகுதியில், நுகம் செய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர் இயேசு; எனவே, அவர் அனுபவத்திலிருந்து, இந்த வார்த்தைகளைக் கூறுகிறார் என்று, புகழ்பெற்ற விவிலிய விரிவுரையாளர், வில்லியம் பார்க்லே (William Barclay) அவர்கள் கூறியுள்ளார். நாசரேத்தில், இயேசுவின் தச்சுக்கூடத்தின் மீது விளம்பரப் பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தால், அதில், "உங்களுக்குப் பொருத்தமான நுகம் இங்கு செய்து தரப்படும்" என்ற வார்த்தைகளே பொறிக்கப்பட்டிருக்கும் என்று, பார்க்லே அவர்கள், இந்த வரிகளுக்கு விளக்கம் தரும்போது, குறிப்பிட்டுள்ளார்.

"என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இயேசு விடுக்கும் இவ்வழைப்பை, இரு வழிகளில் சிந்திக்கலாம். ஒன்று, இயேசு, தன் தச்சுக்கலைத் திறமையால், நம் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான நுகத்தையே செய்து தருவார். அதாவது, நம்மை அழுத்தி, வதைக்காத நுகத்தையே, அவர், நம் தோள்மீது சுமத்துவார் என்ற கோணத்தில் சிந்திக்கலாம். அல்லது, இயேசுவிடம் வந்தால், நுகத்தை நாம் தனியே சுமக்கத் தேவையில்லை அவர் ஏற்கனவே அந்த நுகத்தின் மறுபாதியைச் சுமந்தவண்ணம் நிற்கிறார்; அந்நுகத்தில் இணைந்து தோள்கொடுப்பதற்கு நம்மை அழைக்கிறார் என்ற கோணத்திலும் சிந்திக்கலாம். இயேசுவோடு இணைந்து நாம் சுமப்பதனால், "என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்பதையும் அவர் இன்றைய நற்செய்தியில் உறுதியாகக் கூறியுள்ளார்.

“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்” என்று இயேசு அழைக்கும்போது, என்னிடம் வந்தால், உங்கள் சுமைகளைப் பறந்தோடச் செய்வேன் என்ற பொய்யான விளம்பரத்தை இயேசு தரவில்லை. மாறாக, அவர் சொல்வதெல்லாம் இதுதான்: "சுமையோடு என்னிடம் வாருங்கள். நான் ஒரு சுமைத்தாங்கியாக இருந்து, உங்கள் சுமைகளை ஏற்றுக்கொள்வேன். உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என்னுடன் இணைந்து நீங்களும் நுகத்தை ஏற்று, உங்கள் பணியைத் தொடருங்கள். நான் உங்களுடன் இருப்பதால், நீங்கள் சுமக்கும் நுகம் அழுத்தாது, சுமையும் எளிதாகும்" என்பதே, சுமைகளைச் சமாளிக்க, இயேசு கூறும் தீர்வுகள்.

சுமைகளைச் சுமப்பது, ஒவ்வொருவர் வாழ்விலும், தவிர்க்கமுடியாத எதார்த்தம். இருப்பினும், நாம் சுமப்பது, தேவையான சுமைதானா என்பதைப் புரிந்துகொள்ளும் தெளிவு நமக்குத் தேவை. பெரும்பாலான நேரங்களில், தேவையற்ற சுமைகளை நமக்கு நாமே சுமத்திக்கொண்டு, அவற்றின் பாரத்தால் நொறுங்கிப் போகிறோம். எனவே, தேவையான சுமை எது, தேவையற்ற சுமை எது என்று இனம் காணும் தெளிவு நமக்குக் கிடைக்கவேண்டும் என்று, முதலில் மன்றாடுவோம்.

வாழ்வில் நாம் சுமக்க வேண்டிய, தேவையான சுமைகளை நாம் தனியே சுமப்பதில்லை. இயேசுவும் நம்முடன் இணைந்து தோள் கொடுக்கிறார். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளவும், நம்பி ஏற்றுக்கொள்ளவும், இறைவனின் வரத்தை வேண்டுவோம். இந்த வேண்டுதலுக்கு, புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் பரிந்துரையை நாம் நாடலாம். ஏனெனில் அவர் தன் சுமைகளை எவ்விதம் சுமப்பது, எவ்விதம் இறக்கிவைப்பது என்ற பக்குவத்தைப் பெற்றிருந்தார்.

புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்தைத் துவக்கியவேளையில், பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவ்வேளையில், அவர், ஒவ்வோர் இரவும், உறங்கப் போவதற்குமுன், சிறு செபம் ஒன்றைச் சொன்னார்: "ஆண்டவரே, இயேசுவே, நான் இப்போது உறங்கச் செல்கிறேன். இது உமது திருஅவை. இதனை நீர் பாதுகாத்தருளும்" என்ற வார்த்தைகளுடன் உறங்கச் சென்றதால், தன்னால் நிம்மதியாக உறங்க முடிந்தது என்று அவர் கூறியுள்ளார்.

“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” என்று இயேசு விடுக்கும் அழைப்பை முழுமனதுடன் நம்பி, அவரை அணுகி, நம் சுமைகளைச் சிறிது நேரம் இறக்கிவைத்து, இளைப்பாறுதல் தேடப் பழகிக் கொள்வோம். நமது சுமைகளை நீக்குவதற்கு எளிதான, விரைவான, பொய்யான, தவறான வழிகளைச் சொல்லித்தரும் இவ்வுலகப் பாடங்களை இதுவரை நாம் கற்றுவந்திருந்தால், அவற்றை மறப்பதற்கும், மறுப்பதற்கும் தேவையான உள்ளொளியையும், உறுதியையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

08/07/2017 14:02