2017-07-08 16:12:00

அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்திற்கு வரவேற்பு


ஜூலை,08,2017. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் கொண்டுவரப்பட்டுள்ள, அணு ஆயுதத் தடை ஒப்பந்தம், அணு ஆயுதமற்ற உலகை அமைப்பதற்குப் பொதுப்படையாக நிலவும் ஏக்கங்களை நிறைவேற்றுவதாக அமைந்துள்ளது என, ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நியு யார்க் ஐ.நா. தலைமையகத்தில் இவ்வாரத்தில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கின் இறுதி நாளான இவ்வெள்ளியன்று, இந்த ஒப்பந்தம் குறித்து நடந்த வாக்கெடுப்பில் 122 நாடுகள் கலந்துகொண்டன. இதற்கு ஆதரவாக 120 நாடுகள் வாக்களித்தன. மேலும், நெதர்லான்ட் நாடு இதற்கு எதிராகவும், சிங்கப்பூர் இதில் வாக்களிக்காமலும் இருந்தன.

இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா.பொதுச் செயலரின் செய்தித் தொடர்பாளர் Stéphane Dujarric அவர்கள், அணு ஆயுதத் தடை குறித்து, கடந்த இருபது ஆண்டுகளாக இடம்பெற்றுவந்த கலந்துரையாடலின் பயனாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், அணு ஆயுதமற்ற உலகை அமைப்பதற்கு முக்கியமான முயற்சி எனக் கூறினார்.

இந்த அணு ஆயுதத் தடை ஒப்பந்தம், வருகிற செப்டம்பர் 20ம் தேதி, நியு யார்க் ஐ.நா. தலைமையகத்தில், நாடுகளின் கையெழுத்துக்கு வைக்கப்படும் என்றும், குறைந்தது ஐம்பது நாடுகள் இதனை அமல்படுத்திய 90 நாள்களுக்குப் பின், இது உலகெங்கும் கட்டாயமாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்ட ஐ.நா. கருத்தரங்கில், அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா, இஸ்ரேல் ஆகிய ஒன்பது நாடுகள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.