2017-07-08 15:27:00

ஓஸ்தி, திராட்சை இரசம் குறித்து ஆயர்களுக்குக் கடிதம்


ஜூலை,08,2017. ஆண்டவரின் இறுதி இரவுணவை நினைவுகூரும் திருநற்கருணைக் கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் ஓஸ்தி மற்றும், திராட்சை இரசம் குறித்து, உலகின் அனைத்து ஆயர்களுக்கும், கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது, திருப்பீட திருவழிபாடு மற்றும், அருளடையாளப் பேராயம்.

திருநற்கருணைக்குப் பயன்படுத்தப்படும் ஓஸ்தி மற்றும் திராட்சை இரசத்தின் தரம் குறித்தும், அவைத் தயாரிக்கப்படும் பொருள்கள் குறித்தும், ஆயர்கள் கவனமாய் இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளது அப்பேராயம்.

திருப்பலியில் பயன்படுத்தப்படும் ஓஸ்தி மற்றும் திராட்சை இரசத்தை, அண்மைக் காலமாக, சில துறவறக் குழுக்களே தயாரித்துவந்தவேளை, தற்போது இவை பல்பொருள் அங்காடியிலும், ஏனையக் கடைகளிலும், வலைத்தளத்திலும்கூட கிடைக்கின்றன எனவும், இப்பேராயம் கூறியுள்ளது.

ஓஸ்தி மற்றும் திராட்சை இரசத்தை வழங்குபவர்கள் யார், இவைத் தயாரிக்கப்படும் பொருள்களின் மதிப்பு ஆகியவை குறித்து கவனம் செலுத்துமாறு, ஆயர்கள், அனைத்து அருள்பணியாளர்களுக்கு நினைவூட்ட வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

திருப்பலியில் பயன்படுத்தப்படும் ஓஸ்தி, புளியாத கோதுமை மாவினால் செய்யப்பட வேண்டும் என்றும், ஓஸ்திக்கென வேறு தானியங்களைப் பயன்படுத்துவதும், அந்த மாவில், பழம், சர்க்கரை அல்லது தேன் போன்றவற்றைச் சேர்ப்பதும் பெரும் தவறாகும் என்றும், அக்கடிதம் எச்சரிக்கின்றது.

திருப்பலிக்குப் பயன்படுத்தப்படும் திராட்சை இரசமும், ஏனையப் பொருள்களின் கலப்பில்லாத, அழுகல் இல்லாத, சுத்தமான திராட்சைப் பழத்திலிருந்து தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

திருப்பலிக்கென ஓஸ்தி மற்றும் திராட்சை இரசத்தைத் தயாரிப்பவர்கள், இவை எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை உணர்ந்து, நேர்மை, பொறுப்புணர்வு மற்றும், தகுந்த மரியாதையோடு தயாரிக்க வேண்டுமெனவும், ஆயர் பேரவைத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது, இப்பேராயம்.

இக்கடிதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளின்பேரில் அனுப்பப்பட்டுள்ளதாக, திருப்பீட திருவழிபாடு மற்றும், அருளடையாளப் பேராயம் கூறியுள்ளது. இப்பேராயத்தின் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா, அதன் செயலர் ஆர்த்தூர் ரோச் ஆகிய இருவரும் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.