2017-07-08 15:45:00

மனித வாழ்வு புனிதமானது, மும்பை துணை ஆயர்


ஜூலை,08,2017. கருவான நாள் முதல், இயற்கையான மரணம் அடையும்வரை,  மனித வாழ்வு புனிதமானது என்றும், எந்தச் சூழ்நிலையிலும், ஓர் அப்பாவி உயிரை அழிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்றும் கூறினார், இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர்.  

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவரின் 26 வாரக் கருவைக் கலைப்பதற்கு இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதியளித்திருப்பது குறித்து இவ்வாறு ஆசியச் செய்தியிடம் கூறியுள்ளார், இந்திய ஆயர் பேரவையின் குடும்ப ஆணைக் குழுத் தலைவரும், மும்பை துணை ஆயருமான, ஆயர் சாவியோ பெர்னான்டஸ்.

மனித வாழ்வு குறித்த, கத்தோலிக்கத் திருஅவையின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைத்த, ஆயர் சாவியோ பெர்னான்டஸ் அவர்கள், மனித வாழ்வின் உரிமையாளர் கடவுள் ஒருவரே எனவும், அப்பாவி உயிரைக் கொல்வது கத்தோலிக்கத் திருஅவையின் போதனைக்கு எதிரானது எனவும் தெரிவித்தார்.

இந்தியாவில், 1971ம் ஆண்டின், கர்ப்பம் சார்ந்த மருத்துவ சட்டம் 3(2)(பி) பிரிவின்படி, இருபது வாரக் கருவைக் கலைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 03, இத்திங்களன்று, உச்ச நீதிமன்றம், 26 வார கருவைக் கலைப்பதற்கு அனுமதியளித்துள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவரும், அவரது கணவரும் உச்ச நீதிமன்றத்தில் 26 வாரக் கருவைக் கலைப்பதற்கு மனு தொடுத்திருந்தனர்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.