2017-07-10 15:52:00

கருக்கலைத்தல், தாயின் மாண்பை கட்டிக்காப்பதில்லை


ஜூலை,10,2017. கருக்கலைத்தலை சட்டபூர்வமாக்குவதற்கு சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியாக எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் குறித்து தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர், தொமினிக்கன் குடியரசு ஆயர்கள்.

தொமினிக்கன் ஆயர் பேரவையின் 55வது நிறையமர்வுக் கூட்டத்தின் இறுதியில் ஆயர்களால் வெளியிடப்பட்ட செய்தி, கருக்கலைத்தல் என்பது குற்றமற்ற செயல் என அறிவிக்க முயல்வது, இயற்கை சட்டத்திற்கும், அரசியலமைப்புக்கும் விரோதமானது' என உரைக்கிறது.

வாழ்வுக்கு எதிரான ஒன்றை, சட்டம் வழியாக நிறைவேற்ற முயல்வது, அரசியலமைப்பிற்கு எதிரானது என, மக்கள் பிரதிநிதிகளுக்கு நேரடியான விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர், தொமினிக்கன் ஆயர்கள்.

பெண்களின் உரிமைகளையும் மாண்யையும் பாதுகாக்கிறோம் என்ற பொய்ப் பரப்புரையின் பேரில், கருக்கலைத்தலுக்கு ஆதரவாக விளம்பரங்களை வெளியிடும் சமூகத்தொடர்பு சாதனங்கள் குறித்து, கத்தோலிக்கர்களும், நல்மனதுடையோரும் கவனமுடன் செயல்படவேண்டும் எனவும் அறிவித்துள்ளனர் ஆயர்கள்.

சமூகத்தில் பரவிவரும் ஊழலுக்கு எதிரான தங்கள் வன்மையான கண்டனத்தையும் வெளியிட்டுள்ள ஆயர்கள், நல ஆதரவுத் திட்டங்கள், கல்வி போன்றவை நாட்டின் ஊழலால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திருஅவையில் அருள்பணியாளர்களின் பயிற்சி, மேய்ப்புப்பணி திட்டங்கள் போன்றவைகளுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர், தொமினிக்கன் குடியரசின் ஆயர்கள்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.