2017-07-10 15:48:00

தாய்லாந்தில் பெண்களின் மேம்பாட்டுத் திட்டத்தில் திருஅவை


ஜூலை,10,2017. தாய்லாந்தில், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அனைத்து வகையான வன்முறைகளையும், சுரண்டல்களையும், பாகுபாட்டுநிலைகளையும் எதிர்த்துப் போரிடுவதன் வழியாக, பெண்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உழைக்க தன்னை அர்ப்பணித்துள்ளது தலத்திருஅவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த தாய்லாந்து ஆயர் பேரவையின் பெண்கள் அவையின் உயர் செயலர் அருள்சகோதரி Siphim Xavier அவர்கள், ஏழ்மை, பாலியல் தொழில், குடும்ப வன்முறை போன்றவை, இன்றையை தாய்லாந்து பெண்களின் மிகப்பெரும் சவால்களாக உள்ளன என்றார்.

தரமான கல்வியின்மை, சிறுமிகள் கர்ப்பம் தரித்தல், தொழில் வகை சுரண்டல் போன்றவைகளாலும் தாய்லாந்து பெண்கள் சிரமங்களை அனுபவிப்பதாக குறிப்பிட்டார் அருள்சகோதரி.

தாய்லாந்து தலத்திருஅவை மேற்கொண்டுள்ள, புதியவழி நற்செய்தி அறிவிப்பின் ஒரு பகுதியாக, பெண்களின் வாழ்வு மேம்பாட்டுத் திட்டங்களில் அனைத்து துறவு சபை நிறுவனங்களையும் ஈடுபடுத்தியுள்ளது என்றார் அருள்சகோதரி Siphim.

கல்வி வழியாகவே பெண்களுக்கு தங்கள் உரிமைகள் மற்றும் மாண்பு குறித்த விழிப்புணர்வை வழங்கமுடியும் என்பதையும் வலியுறுத்திக் கூறிய அவர், ஏழ்மையின் பிடியிலிருந்தும், சுரண்டல்களுக்கு தங்களை அனுமதிக்கும் நிலைகளிலிருந்தும் மக்களை வெளிக்கொணரும் திட்டங்களைத் தீட்டி தலத்திருஅவை செயல்படுத்தி வருகிறது என மேலும் கூறினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.