2017-07-11 16:27:00

அணுஆயுதம் இல்லா நிலையே பாதுகாப்பை உறுதி செய்கிறது


ஜூலை,11,2017. அணு ஆயுதத் தடை ஒப்பந்தம், ஐ.நா. அவையில் 122 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அமைதிக்கான பாதையில் ஒரு புதிய படி என அறிவித்துள்ளார், திருப்பீட அதிகாரி பேராயர் சில்வானோ தொமாசி.

அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் குறித்து, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின் செயலர் பேராயர் தொமாசி அவர்கள் உரைக்கையில், சில நாடுகளுடன் திருப்பீடமும் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக, அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்திற்காக முயற்சித்து வந்துள்ளது என்றும், தற்போதைய ஐ.நா. ஒப்பந்தம் மகிழ்ச்சியைத் தருவதாகவும் கூறினார்.

அணு ஆயுதத் தாக்குதலை நடத்துவோம் என, ஐ.நா.வை மதிக்காத வட கொரியா அச்சுறுத்திவரும் இவ்வேளையில், அணுஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடாது என அணுஆயுத நாடுகளை, ஐ.நா. கேட்பது தவறு என சில நாடுகள் கூறிவருவது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பேராயர் தொமாசி அவர்கள், அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதால் மட்டுமே பாதுகாப்புடன் வாழ முடியும் என்ற எண்ணம் மாற்றப்பட்டு, எவருமே அணுஆயுதத்தைக் கொண்டிருக்கவில்லையெனில் பாதுகாப்பு இருக்கும் என்ற எண்ணம் உருவாக்கப்படவேண்டும் என்றார்.

பாதுகாப்பு என்பது கலந்துரையாடல்கள் வழியாக உறுதி செய்யப்பட வேண்டுமேயொழிய, ஆயுத பலத்தால் அல்ல, எனவும் கூறினார் பேராயர் தொமாசி.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.