2017-07-11 16:15:00

ஆஸ்திரிய காரித்தாசின் உதவிகள் அதிகரித்துள்ளன


ஜூலை,11,2017. கடந்த ஆண்டில் பிறரன்பு நடவடிக்கைகளுக்கும், புலம்பெயர்ந்தோர்க்கான உதவிகளுக்கும் என, 90 கோடி யூரோக்களை ஆஸ்திரிய கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு செலவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறரன்பு நடவடிக்கைகளுக்கென 2015ம் ஆண்டில், இதே காரித்தாஸ் அமைப்பு செலவிட்ட தொகையைவிட இது 10 கோடி  யூரோக்கள் அதிகமாகும்.

15 ஆயிரத்து 648 முழு நேரப் பணியாளர்களையும் 40 ஆயிரம் சுய விருப்பப் பணியாளர்களையும் கொண்டு சேவையாற்றிவரும் ஆஸ்திரிய காரித்தாஸ் அமைப்பு, அனைவரும் ஒன்றிணைந்து பிறரன்பிலும் ஒருமைப்பாட்டிலும் சேவையாற்றும்போது, மிகப் பெரியவைகளை ஆற்றமுடியும் என்பதை நிரூபித்து வருகிறது என்றார், ஆஸ்திரிய காரித்தாஸ் அமைப்பின் தலைவர், அருள்பணி Michael Landa.

86,871 குழந்தைகளுக்கும், இளையோருக்கும் என 703 சமூகத் திட்டங்களைக் கொண்டு ஆஸ்திரிய காரித்தாஸ் அமைப்பு செயலாற்றிவருகிறது என்ற அருள்பணி Landa அவர்கள், வீடற்றோருக்குத் தங்குமிடம், மருத்துவ வசதிகள், குடிபெயர்வோர் ஆலோசனை மையங்கள் என, பல்வேறு பணிகள் வழியாக, காரித்தாஸ் அமைப்பு ஆஸ்திரியாவில் சேவையாற்றி வருகிறது என்றார். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.