2017-07-11 16:17:00

இந்தியாவில் அதிகரித்துவரும் வன்முறைகள் குறித்து கவலை


ஜூலை,11,2017. மதம், மொழி, சாதி, மாநிலம் என்ற எல்லைகளைத் தாண்டி, அமைதி, ஒன்றிணைந்த வாழ்வு, உடன்பிறப்பு உணர்வு ஆகியவைகளை ஊக்குவிக்க முன்வரவேண்டும் என, அழைப்பு விடுத்துள்ளனர் இந்திய ஆயர்கள்.

அமர்நாத் கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த இந்து திருப்பயணிகள், காவல்துறைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் சிக்கி, 7 பேர் உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட இந்திய ஆயர்கள், இது ஒரு கோழைத்தனம் மற்றும் வன்முறையைத் தூண்டிவிடும் செயல் எனக் கூறியுள்ளனர்.

ஆயர்களின் இச்செய்தியை வெளியிட்ட இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர், ஆயர் தியோதோர் மஸ்கரெனாஸ் அவர்கள், அண்மைக் காலங்களில் இந்தியாவில் வளர்ந்துவரும் தீவிரவாதத் தாக்குதல்கள், தான்தோன்றித்தனமாக மக்கள் சட்டத்தைக் கையிலெடுத்தல், கொலைகள், குழு வன்முறைகள் போன்றவைகள் குறித்த ஆயர்களின் கவலையையும் வெளியிட்டுள்ளார்.

பசுக்களைக் காப்பாற்றுகிறோம் என்ற முழக்கத்துடன், மக்களைக் கொல்லும் நிலைகள் குறித்து கண்டனத்தை வெளியிட்ட ஆயர் மஸ்கரெனாஸ் அவர்கள், விலங்குகள் பெயராலோ, மதத்தின் பெயராலோ, கடவுளின் பெயராலோ, அல்லது வேறு எந்தக் காரணம் கொண்டோ, வன்முறைகளை நிகழ்த்துவது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றார்.

ஆதாரம் : CBCI/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.