சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ இரக்கத்தின் தூதர்கள்

சாம்பலில் பூத்த சரித்திரம் : தொடக்ககாலக் கிறிஸ்தவம் பாகம் 1

புனித வெள்ளியன்று கொலோசேயும் - RV

12/07/2017 15:19

ஜூலை,12,2017. இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில், புனித யோவான் தவிர எல்லாருமே மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர். திருத்தூதர்கள், நற்செய்தியை அறிவித்த காலத்தில், சீடர்களின் எண்ணிக்கை பெருகியது. எனவே அவர்கள், தங்களின் இறைப்பணிக்கு உதவியாக, இயேசுவின் மீது ஆழ்ந்த நம்பிக்கையும், தூய ஆவியும் நிறைந்த திருத்தொண்டர்களை நியமித்தனர். அவர்களில் ஒருவரான  புனித ஸ்தேவான், கி.பி.35ம் ஆண்டில், எருசலேமில் கல்லால் எறிந்து கொல்லப்பட்டார் (தி.பணி. 6-7). தொடக்ககாலக் கிறிஸ்தவம் பற்றி அறிவதற்கு, அக்காலத்தில் வல்லரசாக விளங்கிய உரோமைப் பேரரசு பற்றியும் சிறிது தெரிந்திருப்பது உதவியாயிருக்கும்.  

உரோமைப் பேரரசு, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா என, பரந்து விரிந்திருந்த ஒரு வல்லரசாகும். ஐந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த உரோமைக் குடியரசு, நிரந்தர சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜூலியஸ் சீசர் கி.மு.44ல் கொல்லப்பட்டது, உள்நாட்டுச் சண்டைகள், அரசியல் மோதல்கள் போன்றவை காரணமாக, வீழ்ச்சியடைந்தது. இதைத் தொடர்ந்து, உருவான உரோமைப் பேரரசு ஏறத்தாழ 1,500 ஆண்டுகள் கோலோட்சியது. உரோமையரின் சட்டத்தின் கீழ், நான்கு பேருக்கு ஒருவர் வீதம் வாழ்ந்து இறந்துள்ளனர் எனச் சொல்லப்படுவதிலிருந்தே இப்பேரரசின் வல்லமையை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. கி.மு.100ம் ஆண்டு முதல், கி.மு. 400ம் ஆண்டுவரை, உரோம் நகரமே, உலகின் மிகப் பெரிய நகரமாக விளங்கியது. உரோமையில் தலைநகரை அமைத்து ஆட்சி செய்து வந்த இப்பேரரசு, மேற்கத்திய கலாச்சாரத்தில், அரசியல் மற்றும், சமூக ரீதியாக செல்வாக்குப் பெற்றிருந்தது.

அகுஸ்துஸ் சீசர், கி.மு. 27ம் ஆண்டில், இப்பேரரசின் முதல் பேரரசராக ஆட்சிசெய்யத் தொடங்கினார். கி.பி. 476ம் ஆண்டில், Romulus Augustulus என்ற பேரரசரோடு, உரோமைப் பேரரசு, உலகின் மேற்கில் வீழ்ந்தது. ஆயினும், உலகின் கிழக்கில், Byzantine பேரரசாக, இது தொடர்ந்தது. இப்பேரரசும், கி.பி. 1453ம் ஆண்டில். ஒட்டமான் துருக்கியர்கள் கான்ஸ்ட்டான்டின்நோபிள் நகரத்தைக் கைப்பற்றியது, மற்றும் 11ம் கான்ஸ்ட்டைன் பேரரசரின் இறப்போடு வீழ்ச்சி கண்டது. உரோமைப் பேரரசின் நீண்ட வரலாற்றில், 54 பேரரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் சிலர் நல்லவர்களாகவும், சிலர் மாபெரும் மனிதர்களாகவும், மேலும் சிலர் தங்கள் அதிகாரத்தை மிக அதிகமாகவே தவறாகப் பயன்படுத்தியவர்களாகவும் இருந்துள்ளனர். இப்பேரரசில், கொலைகள் சர்வசாதாரணமாக நடந்துள்ளன. விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுக்குக்கூட, குடிமக்களிலிருந்து வேறுபட்ட உரிமைகள் இருந்துள்ளன. இப்பேரரசு, தொடக்ககாலக் கிறிஸ்தவர்களுக்கு, மிக ஆபத்தான இடமாக அமைந்திருந்தது. நன்கு உருவாக்கப்பட்டிருந்த உரோமையர்களின் மதத்திற்கு, கிறிஸ்தவக் கோட்பாடுகள் அச்சுறுத்தலாக நோக்கப்பட்டதே இதற்குக் காரணம். இப்பேரரசில், மாநில அதிகாரிகள் மற்றும், தல அதிகாரிகளால் கிறிஸ்தவர்கள் கொடூரமாய்த் துன்புறுத்தப்பட்டனர்.

உரோமைப் பேரரசர்கள் Claudius (41-54), Nero (54–68), Domitian (81–96),Trajan (98–117), Marcus Aurelius(161 to 180), Septimius Severus (193–211), Decius (249–251), Valerian (253–260), Diocletian (284–305) போன்றவர்கள், கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்தி, வதைத்துக் கொன்றவர்கள். நீரோ, கி.பி.54ம் ஆண்டில், தனது 17வது வயதில் ஆட்சிக்கு வந்தவர். கிபி.64ம் ஆண்டில் உரோம் நகர் தீப்பற்றி எரிந்தபோது இவர், ஆனந்தமாக அதைப் பார்த்துக்கொண்டு இசைக்கருவியை மீட்டுக்கொண்டிருந்தார் எனக் கூறப்படுகின்றது. மாபெரும் தீ விபத்தாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வுக்கு, கிறிஸ்தவர்களே காரணம் எனக் குற்றம் சாட்டி, அவர்களை வதைத்துக் கொன்றார் நீரோ. கி.பி.81ம் ஆண்டில் ஆட்சிக்குவந்த தொமிசியன், உரோமையில், தன்னை, ஆண்டவராம் கடவுள் என்று பெயர் சூட்டினார். இப்பூமியின் ஆண்டவர், யாராலும் தோற்கடிக்க முடியாதவர், மகிமையானவர், தூய்மையானவர், தன்னிகரற்றவர் என, குடிமக்கள் எல்லாரும் சொல்லி, தன்னைப் புகழ வேண்டுமென அறிவித்தார். இதற்கு யூதர்களும், கிறிஸ்தவர்களும் மறுப்பு தெரிவித்தனர். அதனால் இவர்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த அரசர் காலத்தில்தான், Flavius Clemens, அவரின் மனைவி Flavia Domitilla ஆகிய இருவரும் நாடுகடத்தப்பட்டு, தூக்கிலிடப்பட்டனர்.

Trajan (98–117) ஆட்சி காலத்தில், கிறிஸ்தவர்களை நடத்துவதற்கென்றே தனிப்பட்ட கொள்கைகள் உருவாக்கப்பட்டன. இஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இந்த அரசர் ஆட்சியில் அமர்ந்ததை வைத்து, உரோமைப் பேரரசு, பிரிட்டன் முதல் ஐரோப்பா எங்கும் பரவியிருந்ததற்குச் சான்றாகச் சொல்லப்படுகிறது. இவர் காலத்தில்தான், உரோமைப் பேரரசு மிகவும் வரிவடைந்ததாம். Trajan, கிறிஸ்தவர்களை அதிகம் துன்புறுத்தியவர் எனக் கூறப்படுகிறது. கிறிஸ்தவம், யூத மதத்தின் ஒரு பிரிவு எண்ணி, யூதர்களோடு கிறிஸ்தவர்களும் துன்புறுத்தப்பட்டனர். ஆனால், Trajan, இந்நிலையை மாற்றி, கிறிஸ்தவர்களை, யூதர்களிடமிருந்து முழுவதும் பிரித்து வதைத்தார் எனச் சொல்லப்பட்டுள்ளது.  கி.பி.107ம் ஆண்டில், பேரரசர் Trajan, அந்தியோக்கு நகர் சென்று, கிறிஸ்தவர்கள், உரோமைக் கடவுளை வணங்க வேண்டும், இல்லாவிடில் மரணத்தை ஏற்க வேண்டும் என்று ஆணையிட்டார். அப்போது அந்தியோக்கு நகர் ஆயராகப் பணியாற்றிய புனித இஞ்ஞாசியார், இந்த ஆணைக்கு இணங்கவில்லை. எனவே இவர் உரோமையிலுள்ள கொலோசேயும் என்ற கேளிக்கை அரங்கில், விலங்குகளால் துண்டு துண்டாகக் கிழிக்கப்பட்டு இறக்க உத்தரவிட்டார் Trajan. புனித இஞ்ஞாசியாரும், காவலர்களுடன் உரோம் வந்தார். கொலோசேயுத்தில் சிங்கங்களுக்கு உணவாகப் போடப்பட்டார். அப்போது அப்புனிதர், "இறைவனின் கோதுமை மணி நான். சிங்கத்தின் பற்களால் அறைக்கப்பட்டு, கிறிஸ்துவின் தூய்மையான அப்பமாக மாறுவதற்காக படைக்கப்பட்ட கோதுமை மணி நான்" எனச் சொல்லி, எந்தவித எதிர்ப்பும் காட்டாமல், மிகவும் துணிச்சலுடன் மரணத்தைத் தழுவியுள்ளார். இவரே, உரோம் கொலோசேயுத்தில் மறைசாட்சியாக இறந்த முதல் புனிதராவார். இப்பேரரசில், கி.மு.2ம் நூற்றாண்டில், குற்றவாளிகளைக் கொடிய விலங்குகளுக்கு உணவாகப் போட்டுக் கொல்லும் பழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உரோம் நகரில், உரோமைப் பேரரசர்களின் மாளிகைகள் அமைந்திருந்த இடத்திற்கு கிழக்கே, ஏறத்தாழ கி.பி.70க்கும்., 72க்கும் இடைப்பட்ட காலத்தில், வெஸ்பாசியன் (Vespasian) பேரரசரால், உரோம் மக்களுக்குப் பரிசாக கட்டப்பட்ட கேளிக்கை அரங்கே கொலோசேயும். கி.பி.80ம் ஆண்டில், வெஸ்பாசியனின் மகன் டைட்டஸ் (Titus), இதனை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். பொதுமக்களை மகிழ்விப்பதற்கென, இரத்தம் சிந்தும் குத்துச் சண்டை, கொடிய விலங்குகள் சண்டை உட்பட பல கேளிக்கை விளையாட்டுகள், நூறு நாள்களுக்கு இங்கு நடைபெறும். குத்துச் சண்டை போடும் மனிதர், ஒரு கைதியாகவோ அல்லது அடிமையாகவோ இருப்பார். இவர் மனிதரோடு அல்லது, கொடிய மிருகத்தோடு சண்டை போடுவதற்கென பயிற்றுவிக்கப்பட்டிருப்பார். இந்த கேளிக்கை அரங்கு கிறிஸ்தவர்களைக் கொல்வதற்கெனவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐம்பதாயிரம் முதல் எண்பதாயிரம் பேர்வரை அமரக்கூடிய இவ்வரங்கில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கொடூரமான விலங்குகளுக்கு உணவாகப் போடப்பட்டும், கொலை செய்யப்பட்டும், மறைசாட்சிகளாக இறந்தனர். இதனை, அரசன் முதல் பலரும், ஒரு விளையாட்டாக பார்த்து இரசித்துள்ளனர்.

அக்காலத்தில், எகிப்திலிருந்து உரோமைக்கு வந்த கிறிஸ்தவத் துறவி புனித Telemachus என்பவர், உரோம் கொலோசேயத்தில் கொடூரமாய் நடந்துகொண்டிருந்த, இரத்தம் சிந்தும் குத்துச்சண்டை கொலைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, இக்கொலைகள் நிறுத்தப்படட்டும் எனக் கத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த பார்வையாளர் கும்பல், அவர் மீது கல்லெறிந்து கொலை செய்தது. இவரின் இறப்பைத் தொடர்ந்து, சிலகாலத்திற்குப் பின், பேரரசர் Honorius, இவ்வரங்கில் நடைபெற்ற குத்துச் சண்டை கொலைகளை நிறுத்தினார். இவ்விடத்தில், கிறிஸ்தவர்கள், பொதுக் குற்றவாளிகளாக, சிலுவையில் அறையப்பட்டும், கொடிய மிருகங்களுக்கு இரையாகப் போடப்பட்டும் (damnatio ad bestia) கொல்லப்பட்டுள்ளனர். இவ்விடத்தில், அந்தியோக் நகரின் ஆயரான புனித இஞ்ஞாசியார் கொல்லப்பட்ட பின்னர், 115 கிறிஸ்தவர்கள் அம்பால் எய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் எனச் சொல்லப்படுகிறது.

கொடூரமான உரோமைப் பேரரசர்கள், கிறிஸ்தவர்கள், புதுப்புது முறைகளில் கொல்லப்படுவதை வரவேற்று இரசித்துள்ளனர். மங்கலான வைகறைப் பொழுதில்,  கொலோசேயும் அரங்கில் வெளிச்சம் தெரிய வேண்டுமென்பதற்காக, கிறிஸ்தவர்கள் சிலுவையில் அறையப்பட்டு உயிரோடு கொளுத்தப்படும் முறையை நீரோ அமல்படுத்தியுள்ளான். இவ்வாறு உரோம் கொலோசேயும், கிறிஸ்தவ மறைசாட்சிகளின் குருதியால் நனைந்துள்ள புனித இடமாகும். புனித வெள்ளியன்று இங்கு திருத்தந்தையர் தலைமையில் சிலுவைப்பாதை பக்தி முயற்சி நடைபெறுகின்றது. கிறிஸ்தவர்களும், அடிமைகளும், குற்றவாளிகளும், கொடிய விலங்குங்களுக்குப் போடப்படுவதைப் பார்த்து மக்கள் இரசித்த இந்த இடத்தில், இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து, நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படும்போது அல்லது அது இரத்து செய்யப்படும்போது, ஒரு சிறப்பு விளக்கு, 48 மணி நேரங்களுக்கு எரியவிடப்படுகின்றது.  

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

12/07/2017 15:19