2017-07-12 15:50:00

உக்ரைன் நாட்டில், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி


ஜூலை,12,2017. உக்ரைன் நாட்டு மக்களுக்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வேண்டி, விரும்பும் அமைதியை எடுத்துச்செல்லும் ஒரு கருவியாக, தான் அந்நாட்டிற்குச் செல்வதாக, கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள் கூறினார்.

ஜூலை 11, இச்செவ்வாயன்று, உக்ரைன் நாட்டிற்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட கர்தினால் சாந்த்ரி அவர்கள், தன் பயணத்திற்கு முன், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டுள்ள உக்ரைன் நாட்டு மக்கள், கிறிஸ்துவின் சிலுவையிலும் பங்குபெற்று வருகின்றனர் என்று தன் பேட்டியில் குறிப்பிட்ட கர்தினால் சாந்த்ரி அவர்கள், அரசியல் சூழலால் துன்பங்களை அனுபவிக்கும் உக்ரைன் மக்களில் பெரும்பாலானோர், அப்பாவி மக்களும், குழந்தைகளுமே என்று எடுத்துரைத்தார்.

உக்ரைன் நாட்டிற்குத் தேவையான அமைதி, வானிலிருந்து 'பாராச்சூட்' வழியே கீழே விழும் பொருள் அல்ல; மாறாக, அங்கு வாழ்வோர், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதாலும், உரையாடல்கள் மேற்கொள்வதாலும் உருவாகும் ஒரு சூழலே அமைதியைக் கொணரும் என்று, கர்தினால் சாந்த்ரி அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

இச்செவ்வாய் காலை, உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்வுக்குச் சென்ற கர்தினால் சாந்த்ரி அவர்கள், அந்நாட்டில் கொலையுண்ட கிறிஸ்தவர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள நினைவிடங்களைப் பார்வையிட்டார் என்றும், ஜூலியன் நாள்காட்டியின்படி, ஜூலை 12, இப்புதனன்று கொண்டாடப்பட்ட புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா திருப்பலியை தலைமையேற்று நடத்தினார் என்றும், கீழை வழிபாட்டு முறை பேராயம் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.